குற்றச்செயல்களில் ஈடுபட மாட்டேன் என உறுதி அளித்தவர்: மீண்டும் திருடிய வாலிபர் சிறையில் அடைப்பு

சென்னை காசிமேடு ஜி.எம். பேட்டையை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 23). இவர் மீது காசிமேடு, ராயபுரம் போலீஸ் நிலையங்களில் வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் உள்ளன.

Update: 2018-09-17 22:45 GMT
திருவொற்றியூர்,

இவர் கடந்த மே மாதம் காசிமேடு குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் முன்னிலையில் வண்ணாரப்பேட்டை போலீஸ் துணை கமிஷனர் ரவளிபிரியாவிடம் சென்று, “நான் இனிமேல் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டேன்” என குற்ற விசாரணை முறை சட்டம் 109 பிரிவின்படி பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார்.

இதனை தொடர்ந்து 55 நாட்கள் எந்தவித குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இருந்த மணிகண்டன் கடந்த ஜூன் மாதம் 25-ந் தேதி ராயபுரத்தை சேர்ந்த பார்த்தசாரதி என்பவரது வீட்டில் செல்போன் திருடிவிட்டு தலைமறைவாகி விட்டார்.

இதனையடுத்து கடந்த 10-ந் தேதி ராயபுரம் போலீசார் அவரை கைது செய்தனர். குற்ற விசாரணை சட்டத்தின் கீழ் விதிகளை மீறியதால் அவர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்த நாளில் இருந்து குற்றச்செயல்களில் ஈடுபடாத நாட்களை கழித்து மீதமுள்ள 310 நாட்கள் மணிகண்டனுக்கு சிறை தண்டனை விதித்து துணை கமிஷனர் ரவளிபிரியா உத்தரவிட்டார். இதையடுத்து அவரை போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்