நாகூரில் 2 பேர் மீது தாக்குதல்: 3 பேர் கைது

நாகூரில் 2 பேரை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-09-17 21:45 GMT
நாகூர், 

நாகையை அடுத்த நாகூரில் கடந்த 13-ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. அப்போது தெத்தியில் நடந்த விநாயகர் சிலை ஊர்வலத்தில் தெத்தி தெற்கு தெருவை சேர்ந்த மனோகரன் மகன் மணிகண்டன் (வயது22) என்பவர் கலந்து கொண்டார். அப்போது பாலமுருகன் என்பவர் மணிகண்டன் சட்டையை பிடித்து இழுத்துள்ளார்.

இதனால் 2 பேருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் அங்கிருந்து சென்று விட்டனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் தெத்தியில் உள்ள ஒரு விளையாட்டு மைதானத்தில் மணிகண்டன், அதே பகுதியை சேர்ந்த கணேசன் மகன் முருகராஜ் (23), சண்முகநாதன் மகன் வினித்குமார் (22) ஆகியோர் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த பாலமுருகனை, மணிகண்டன் வழிமறித்து விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது “சட்டையை ஏன் பிடித்து இழுத்தாய்“ என்று கேட்டு அவரை தாக்கி உள்ளார். அங்கிருந்த பாலமுருகனின் நண்பர் திலகரன் அவர்களை விலக்கி விட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மணிகண்டனின் நண்பர்கள் முருகராஜ், வினித்குமார் ஆகிய 2 பேரும் சேர்ந்து கிரிக்கெட் ஸ்டெம்பால் திலகரனை தாக்கினர். இதில் காயம் அடைந்த 2 பேரும் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து திலகரன் கொடுத்த புகாரின் பேரில் நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன், முருகராஜ், வினித்குமார் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்