ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை - கவர்னர் கிரண்பெடி எச்சரிக்கை

ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கவர்னர் கிரண்பெடி எச்சரித்தார். பயணிகள் புகார் தெரிவிக்கும் வகையில் குறைதீர்க்கும் அட்டையையும் அவர் வெளியிட்டார்.

Update: 2018-09-17 23:45 GMT
புதுச்சேரி,

புதுவை அரசு போக்குவரத்து துறை சார்பில் ஆட்டோக்களுக்கு மீட்டர் பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டு கட்டணமும் நிர்ணயம் செய்து அறிவிக்கப்பட்டது. ஆனால் புதுச்சேரியில் ஆட்டோ ஓட்டுனர்களில் பெரும்பாலானோர் போக்குவரத்துத்துறை நிர்ணயித்த கட்டணத்தை வசூலிப்பதில்லை. மேலும் இணையதளம் மூலம் முன்பதிவு செய்து வரவழைக்கும் கார்களில் செல்ல பயணிகளை அனுமதிப்பது இல்லை. இதுகுறித்து கவர்னர் கிரண்பெடிக்கு தொடர்ந்து புகார்கள் தெரிவிக்கப்பட்டு வந்தன.

இதனை தொடர்ந்து கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆட்டோ டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக குறைதீர்க்கும் அட்டை ஒன்றை தயாரித்து கிரண்பெடி வெளியிட்டார். அதனை போக்குவரத்து துறை ஆணையர் சிவக்குமார் பெற்றுக்கொண்டார்.

இந்த புகார் அட்டையில், ஆட்டோக்கள் மீது புகார் தெரிவிக்க விரும்புபவர்களுக்கு வசதியாக ஆட்டோ பதிவு எண், சம்பவம் நடந்த நேரம், தேதி, புறப்படும் மற்றும் இறங்கும் இடம், பயணியின் பெயர், செல்போன் எண் ஆகிய விவரங்களை குறிப்பிட வேண்டும். இதுமட்டுமின்றி மீட்டர் போட மறுப்பு அல்லது மீட்டர் பழுது, அதிக கட்டணம், சவாரிக்கு மறுத்தல், ஒழுங்கீனம் போன்ற கேள்விகள் இடம் பெற்றுள்ளன. இதில் எந்த வகை புகார் என்பதை பயணிகள் குறிப்பிடலாம். ஆட்டோ கட்டணம் குறித்த விவரம், காவல் கட்டுப்பாட்டு அறை எண், போக்குவரத்து கட்டணமில்லா தொலைபேசி எண் உள்ளிட்டவையும் அதில் இடம் பெற்றுள்ளன.

அதிகபடியான கட்டணம் வசூலிக்கும் ஆட்டோக்கள் குறித்த விவரங்களை இந்த அட்டையில் குறிப்பிட்டு தபால் மூலம் போக்குவரத்துத்துறைக்கு அனுப்பலாம். அதன்பின் அந்த அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுகுறித்து கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

ஆட்டோ பயணிகள் குறைதீர்க்கும் அட்டை வெளியிடப்பட்டுள்ளது. ஆட்டோ பயணிகளுக்கு இது இலவசமாக வழங்கப்படும். இந்த அட்டையில் உள்ள விவரங்களை பயன்படுத்தி பயணிகள் புகார் தெரிவிக்கலாம். அந்த புகார்கள் பரிசீலிக்கப்பட்டு உண்மை இருக்கும்பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது போக்குவரத்து துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொடர்ந்து யார் மீது புகார் தெரிவிக்கப்படுகிறது என்பதை அறிய ஒரு பட்டியல் தயாரிக்க வேண்டும். அதை மற்ற அதிகாரிகளிடம் சுருக்கமாக கூறி, பகிர்ந்து கொள்ள வேண்டும். இதுகுறித்து ஆட்டோ உரிமையாளர் மற்றும் ஓட்டுனரை போக்குவரத்து துறை ஆணையர் அழைத்து புகார் குறித்து விளக்கம் கேட்க வேண்டும். அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மூன்று முறை தவறு செய்யும் ஓட்டுனர்களின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய வேண்டும். இது தொடர்பாக அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி சட்டப்படி நடந்து கொள்ளச் செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

புதுச்சேரி போக்குவரத்து துறை ஆணையர் சிவக்குமார், போலீஸ் டி.ஐ.ஜி.சந்திரன் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

புதுச்சேரியில் ஓடும் ஆட்டோக்களில் புதிய கட்டண விகிதங்கள் கடந்த 8.12.2016 முதல் அமலுக்கு வந்தது. புதிய கட்டண விகித பட்டியலை ஒவ்வொரு ஆட்டோவிலும் பயணிகளின் பார்வைக்கு தெரியும்படி வைத்திருந்து பட்டியலின்படி கட்டணம் வசூலிக்க வேண்டும் என்றும் அரசாணை வெளியிடப்பட்டது. அரசு விதித்த கட்டணங்களுக்கு மேல் அதிக கட்டணம் வசூலிக்கும் ஆட்டோக்கள் மீதும் மோட்டார் வாகன சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும். பயணிகளின் குறைகளை தீர்க்கவும், பயணிகள் குறைகளை தெரிவிக்கும் அட்டை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த அட்டையை புதிய பஸ் நிலையம், ரெயில் நிலையம், விமான நிலையம், கடற்கரை சாலை, சுண்ணாம்பாறு படகு குழாம், மணக்குள விநாயகர் கோவில், அரவிந்தர் ஆசிரமம், சுற்றுலா விருந்தினர் மாளிகை மற்றும் போக்குவரத்து துறை சோதனை சாவடிகளில் பொதுமக்கள் பெற்றுக்கொள்ளலாம். பொதுமக்களிடம் இருந்து வரும் புகார்களை பரிசீலனை செய்து சம்பந்தப்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்