விடுதி காப்பாளர் இடமாற்றத்துக்கு மாணவர்கள் எதிர்ப்பு

தேனி அருகே முத்துத்தேவன்பட்டியில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கல்லூரி மாணவர் விடுதி காப்பாளர் இடமாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் விடுதி மாணவர்கள் உருக்கமான மனு அளித்தனர்.

Update: 2018-09-17 21:30 GMT
தேனி,

தேனி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் செயல்படும் விடுதிகளின் காப்பாளர்கள் 3 பேர், அலுவலக டிரைவர் ஆகிய 4 பேர் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் சாந்தி பிறப்பித்துள்ளார். அதன்படி, தேனி அருகே முத்துத்தேவன்பட்டியில் உள்ள கல்லூரி மாணவர் விடுதி காப்பாளர் அழகுராஜா தூத்துக்குடி மாவட்டத்துக்கும், தருமாபுரி விடுதி காப்பாளர் செல்லமுத்து விருதுநகர் மாவட்டத்துக்கும், ஆண்டிப்பட்டி விடுதி காப்பாளர் பாப்புராஜ் சிவகங்கை மாவட்டத்துக்கும், அலுவலக டிரைவர் தவமணி விழுப்புரம் மாவட்டத்துக்கும் பணி இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் முத்துத்தேவன்பட்டியில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதியை சேர்ந்த மாணவர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று மாலையில் வந்தனர். விடுதி காப்பாளர் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட கலெக் டர் பல்லவி பல்தேவை சந்தித்து அவர்கள் ஒரு கோரிக்கை மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

நாங்கள் விடுதியில் எந்த குறையும் இன்றி நன்றாக வசித்து வருகிறோம். உணவில் எந்த குறையும் இல்லாமல் மாணவர்களுக்கு என்ன தேவைகள் என்பதை அறிந்து அதை பூர்த்தி செய்தும், பெற்றோர் இல்லாமல் நோட்டு, புத்தகம் வாங்க முடியாத மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்களை வாங்கிக் கொடுத்தும் விடுதி காப்பாளர் அழகுராஜா பணியாற்றி வந்தார். படிப்பில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு கோட்டூரில் மாலை நேர படிப்பையும் ஏற்படுத்திக் கொடுத்தார்.

விசேஷ நாட்களில் அவர் தனது ஊதியத்தில் இருந்து எங்களுக்கு உணவு வாங்கி கொடுப்பதோடு, அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகையும், பரிசும் வழங்கி வந்தார். தேர்வு காலங்களில் எங்களுக்கு மாதிரி வினாத்தாள்களை வாங்கிக் கொடுத்து ஊக்கமளித்தார். நல்ல தந்தையை எந்த மகனும் விட்டுக் கொடுக்க மாட்டான். அதுபோல், எங்களின் நல்ல காப்பாளரை எங்களால் விட்டுக் கொடுக்க இயலவில்லை. எங்களின் காப்பாளர் அழகுராஜா, மறுபடியும் எங்கள் விடுதிக்கு வர வேண்டும். அவர் இல்லாமல் நாங்கள் மகிழ்வுடன் இருக்க மாட்டோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. 

மேலும் செய்திகள்