ரூ.4 லட்சம் கொள்ளையடித்த ஆம்புலன்ஸ் டிரைவர் கைது

திண்டுக்கல்லில் காரை மறித்து ரூ.4 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் 108 ஆம்புலன்ஸ் டிரைவரை போலீசார் கைதுசெய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.

Update: 2018-09-17 21:45 GMT
திண்டுக்கல், 

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

நெல்லை மாவட்டம் வள்ளியூரை சேர்ந்த ஒப்பந்ததாரர் லாரன்ஸ். இவர், திண்டுக்கல்லில் இருந்து தேனி மாவட்ட ரேஷன்கடைகளுக்கு லாரியில் ரேஷன்பொருட்களை அனுப்பி வைக்கும் ஒப்பந்தம் எடுத்துள்ளார். இதற்கான லாரி வாடகை, சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு சம்பளம் ஆகியவற்றை வாரந்தோறும் கொடுப்பது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் லாரன்ஸ், லாரி வாடகை மற்றும் சம்பளம் கொடுக்க தனது மேலாளர் ஹரிகரசுதனை ரூ.4 லட்சத்துடன் திண்டுக்கல்லுக்கு அனுப்பி வைத்தார்.

இதையடுத்து ஹரிகரசுதனும், டிரைவர் நம்பிராஜன் என்பவரும் காரில் திண்டுக்கல்லுக்கு வந்தனர். ஹரிகரசுதனை லாரி செட்டில் இறக்கி விட்டுவிட்டு, திண்டுக்கல் பஸ்நிலையத்தில் நின்ற ஒருவரை அழைத்து வர நம்பிராஜன் காரில் சென்றார். நாகல்நகர் ரவுண்டானா அருகே கார் வந்தபோது, மற்றொரு கார் வேகமாக வந்து குறுக்காக நின்றது. அதில் இருந்து இறங்கிய 3 பேர், நம்பிராஜனுடன் தகராறில் ஈடுபட்டனர். பின்னர் அவரை மிரட்டி, ரூ.4 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர்.

இதுதொடர்பாக திண்டுக்கல் தெற்கு போலீஸ் நிலையத்தில் நம்பிராஜன் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் நாகல்நகரில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து காரை அடையாளம் கண்டனர்.

பின்னர் நடத்திய விசாரணையில் செல்லாண்டியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பவானிசங்கர் (வயது 30) உள்பட 3 பேர் சேர்ந்து ரூ.4 லட்சத்தை கொள்ளையடித்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பவானிசங்கரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருக்கும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கைதான பவானிசங்கர் 108 ஆம்புலன்ஸ் டிரைவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்