நெல்லிக்குப்பம் அருகே போலீஸ்காரர் தாக்கியதில் தொழிலாளி காயம்

நெல்லிக்குப்பம் அருகே போலீஸ்காரர் தாக்கியதில் தொழிலாளி காயமடைந்தார். இந்த நிலையில் சோதனைச்சாவடியை பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-09-17 22:46 GMT
நெல்லிக்குப்பம்,


கடலூர் திருவந்திபுரத்தை சேர்ந்தவர் தயாளன்(வயது 36). கட்டிட தொழிலாளி. இவரும் பில்லாலி தொட்டியை சேர்ந்த கிருஷ்ணன்(45) என்பவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் நேற்று திருவந்திபுரத்தில் இருந்து புதுச்சேரிக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து அதே மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பினர்.

அப்போது நெல்லிக்குப்பத்தை அடுத்த மருதாடு பகுதியில் உள்ள சோதனை சாவடியை கடந்து சென்றனர். அப்போது அங்கு போலீசார் வாகன சோதனை மேற்கொள்ளும் வகையில் சாலையில் தடுப்பு கட்டைகளை வைத்து இருந்தனர். இதை கண்டித்து தயாளன், கிருஷ்ணன் ஆகியோர், சத்தம்போட்டபடி சென்றனர்.

உடன் இங்கு பணியில் இருந்த போலீஸ்காரர் செல்வம் என்பவர் தயாளனை தாக்கினார். அப்போது அவர் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். மேலும் அவருக்கு பின்னால் இருந்த கிருஷ்ணனும் தவறி விழுந்தார். இதில் காயமடைந்த தயாளன் அங்கு மயங்கிய நிலையில் கிடந்தார்.
இதை பார்த்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் கிருஷ்ணன் ஆகியோர் சேர்ந்து சோதனைச்சாவடியை முற்றுகையிட்டு, போலீஸ்காரர் செல்வத்திடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் காயமடைந்த தயாளனை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுபற்றி தகவல் அறிந்த போலீசார், மருத்துவமனைக்கு சென்று தயாளனிடம் விசாரணை நடத்தினர். அப்போது மதுவிலக்கு சோதனை சாவடியில் இருந்த போலீஸ்காரர் குடிபோதையில் இருந்ததாகவும், அதனால் தான் அவர் தன்னை தாக்கியதாகவும் கூறினார்.

பின்னர் கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக், பண்ருட்டி மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இதற்கிடையே தயாளனும் மதுகுடித்து வந்ததாக கூறப்படுகிறது.

எனவே இந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தி, அதன் பின்னரே உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்