பாதுகாப்பு கேட்டு மாவட்ட வருவாய் அலுவலரிடம் நரிக்குறவர்கள் மனு

பாதுகாப்பு கேட்டு மாவட்ட வருவாய் அலுவலரிடம் நரிக்குறவர்கள் மனு அளித்தனர்.

Update: 2018-09-17 22:52 GMT
வேலூர்,

வாலாஜா தாலுகா வேப்பூர் ராசாத்திபுரத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து, மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபனிடம் புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியதாவது:-

நாங்கள் பல ஆண்டுகளாக ராசாத்திபுரத்தில் வாழ்ந்து வருகிறோம். நாங்கள் தங்கியுள்ள பகுதி அருகில் உள்ள சிலர், எங்களுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வருகின்றனர். 13-ந்தேதி சிலர், நாங்கள் தங்கி இருக்கும் இடத்தின் அருகே குடித்து விட்டு வந்து தகராறில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து நாங்கள் கேட்டபோது எங்களை அவர்கள் தாங்கினர். அதில் எங்களது தரப்பைச் சேர்ந்த பலருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல் தொடர்பாக ஆற்காடு டவுன் போலீசார் எங்களில் 2 பேரையும், தகராறு செய்த எதிர்த்தரப்பைச் சேர்ந்த 2 பேரையும் கைது செய்துள்ளனர். தகராறில் நாங்கள் ஈடுபடவில்லை.

அவர்கள் தான் எங்களை தாக்கினர். கைது செய்யப்பட்ட எங்கள் தரப்பைச் சேர்ந்தவர்களை விடுவிக்க வேண்டும். மேலும் எங்களை தாக்கியவர்களால் எங்களுக்கு அச்சுறுத்தல் உள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுத்து, எங்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.

முன்னதாக மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

மேலும் செய்திகள்