தடுப்புக்கட்டையில் மோட்டார் சைக்கிள் மோதல்; தனியார் நிறுவன ஊழியர் பலி

வேப்பூர் அருகே தடுப்புக்கட்டையில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2018-09-17 21:45 GMT
வேப்பூர், 


விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள முடியனூர் கிராமத்தை சேர்ந்தவர் தவசி மகன் வேல்முருகன் (வயது 35), இவரும் அதே பகுதியை சேர்ந்த பொன்னன் மகன் மணி(30) என்பவரும் நண்பர்கள். இவர்கள் இருவரும் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியர்களாக வேலை பார்த்து வந்தனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு வேல்முருகனும், மணியும் சொந்த ஊருக்கு வந்திருந்தனர். இந்த நிலையில் கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே என்.நாரையூரில் உள்ள தனது உறவினரை பார்ப்பதற்காக வேல்முருகன் நேற்று காலை மணியை அழைத்துக் கொண்டு தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.

வேப்பூர் கூட்டுரோடு அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது, எதிர்பாராதவிதமாக சாலையோரம் இருந்த தடுப்புக்கட்டையில் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த வேல்முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த மணியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுபற்றி தகவல் அறிந்த வேப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பலியான வேல்முருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்