நித்திரவிளை அருகே டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்

நித்திரவிளை அருகே டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

Update: 2018-09-17 23:23 GMT
நித்திரவிளை,

நித்திரவிளை அருகே டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் கடைக்கு கொண்டு வந்த மதுபாட்டில்களை இறக்க விடாமல் திருப்பி அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

நித்திரவிளை அருகே மங்காடு ஊராட்சியில் ஆலவிளையில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து அந்த கடைக்கு நேற்று மாலை லாரியில் மதுபாட்டில்களை கொண்டு வந்து ஊழியர்கள் இறக்க முயன்றனர்.

இதை பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் உடனே டாஸ்மாக் கடை முன் திரண்டனர். அவர்கள் டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் கடைக்கு கொண்டு வந்த மதுபாட்டில்களை இறக்க விடாமல் தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி நித்திரவிளை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதை ஏற்க பொதுமக்கள் மறுத்து விட்டனர். அதைத்தொடர்ந்து டாஸ்மாக் கடைக்கு கொண்டு வந்த மதுபாட்டில்கள் லாரியோடு திருப்பி அனுப்பப்பட்டது. இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

ஏற்கனவே கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இதே பகுதியில் டாஸ்மாக் கடை திறக்க முயன்றனர். அப்போதும் பொதுமக்கள் போராட்டம் நடத்தி டாஸ்மாக் கடை திறப்பதை தடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்