புழல் சிறையில் கைதிகளுக்கு சலுகை வழங்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

புழல் சிறையில் கைதிகளுக்கு சலுகை வழங்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

Update: 2018-09-18 08:15 GMT
கோவில்பட்டி, 

புழல் சிறையில் கைதிகளுக்கு சலுகை வழங்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

இதுகுறித்து அவர் கோவில்பட்டியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

சொர்க்கபுரியான சிறை

விசுவகர்ம சமுதாயத்தினர் உலகத்தையே வடிவமைத்தவர்கள். விசுவகர்ம ஜெயந்தி விழாவும், பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளும் ஒரே நாளில் கொண்டாடப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் தலைசிறந்த நாடாக இந்திய நாட்டை கொண்டு வர வேண்டும் என்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

நவீன ஓட்டலைவிட சொர்க்கபுரியாக புழல் சிறை மாற்றப்பட்டு, கைதிகளுக்கு முறைகேடாக பல்வேறு சலுகைகளும் வழங்கப்பட்டு உள்ளன. இதற்கு காரணமான அனைவரின் மீதும் கடும் நடவடிக்கை எடுத்து தண்டிக்க வேண்டும்.

ராஜீவ் கொலை கைதிகள்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை கைதிகள் 7 பேர் விடுதலை செய்யப்படுவதை தடை செய்ய வேண்டும் என்ற எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை. அவர்களின் விடுதலை தொடர்பாக, தமிழக கவர்னருக்கு எது நியாயம்? என்று தெரியும். அதன்படி அவர் செயல்படுவார். அதனை அனைவரும் ஏற்று கொள்ள வேண்டும்.

சென்னையில் பெரியார் சிலையை அவமதித்தவரின் பின்னணியில் யார் உள்ளார் என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும். எச்.ராஜாவை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று தொல்.திருமாவளவன் கூறி உள்ளார். இதற்கு முன்பாக திருமாவளவனும் ஒன்றை பேசி விட்டு, பின்னர் நான் அதைப்பற்றி பேசவில்லை என்று மாறி மாறி கூறி உள்ளார்.

இவ்வாறு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

மேலும் செய்திகள்