குட்கா ஊழலை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் பெரம்பலூர், அரியலூரில் நடந்தது

குட்கா ஊழலை கண்டித்து பெரம்பலூர், அரியலூரில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-09-18 22:45 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூரில் மாவட்ட தி.மு.க. மற்றும் தோழமை கட்சிகள் சார்பில், அ.தி.மு.க. ஆட்சியில் நடந்துவரும் குட்கா ஊழல், உலக வங்கி யிடம் இருந்து நீர்ப்பாசன திட்டங்களுக்கான கடனுதவியை சரிவர பயன்பாடுத்தாமை மற்றும் அனைத்து துறைகளிலும் நடந்துவரும் ஊழலை கண்டித்து பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் குன்னம் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் பிரபாகரன் வரவேற்றார். முன்னாள் மத்திய மந்திரியும், தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளருமான ஆ.ராசா ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-
தமிழ்நாட்டில் அனைத்து துறைகளிலும் லஞ்சம், ஊழல் பெருகிவிட்டது. குட்கா ஊழலில் மாதவராவ் எழுதி வைத்திருந்த நாட் குறிப்பு பதிவுகளை ஆதாரமாக கொண்டு வருமான வரித்துறை போலீஸ் டி.ஜி.பி. டி.ஐ.ஜி. உள்பட 8 பேர் மீது வழக்குபதிவு செய்து சி.பி.ஐ. 3 பேரை கைது செய்துள்ளது. காவல் துறை அதிகாரிகளே லஞ்சம் வாங்கியது ஆதாரப்பூர்வமாக அம்பலமாகியுள்ளது. இந்த வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட அமைச்சர் விஜயபாஸ்கர் மீது எந்த நடவடிக்கையும் தமிழக அரசு எடுக்கவில்லை.

தமிழக அரசு கடந்த 25 ஆண்டுகளில் நடந்திராத அளவிற்கு நிர்வாக சீர்குலைவு களால் அரசு நிர்வாகம் நீர்த்துப்போய் உள்ளது. உலக வங்கியிடம் தமிழ்நாட்டில் பாசன திட்டங்களுக்கு ரூ.800 கோடி கடனுதவி வழங்கியது. இந்த பணத்தை வாரி சுருட்டிக்கொண்டு டெல்டா பாசன விவசாயிகளை வஞ்சித்து ஏமாற்றிவிட்டனர். பாசன திட்டங்களுக்கு பயன்படுத்தாததால் காவிரியில் 150 டி.எம்.சி. தண்ணீர் வீணாக சென்று கடலில் கலந்துள்ளது. முக்கொம்பில் மணல் அதிகம் அள்ளியதால் அணை பழுதாகிவிட்டது. உடனே பழுதை சீர்செய்ய வேண்டும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் அதனை பொருட் படுத்தாததால் மேலும் அதிகளவு தண்ணீர் வீணாகிறது.

பா.ஜ.கவை சேர்ந்த எச்.ராஜா உயர்நீதிமன்றத்தை அவமதித்து பேசுகிறார். அவர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க தயங்குகிறது. ஏனெனில் அ.தி.மு.க. ஆட்சியின் பிடி பா.ஜ.க.விடம் உள்ளது. 2019-ல் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வும், ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பா.ஜ.க.விற்கு எதிராக கட்சிகளை ஒருங் கிணைத்து நரேந்திர மோடி அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவோம். 2-வதாக தமிழகத்தில் நடந்துவரும் அ.தி.மு.க. ஆட்சியை அகற்றிவிட்டு மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியை அமர்த்துவோம் என்று கூறினார்.

இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் அட்சயகோபால், வக்கீல் ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் ஓவியர் முகுந்தன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் துரைசாமி, ராஜ்குமார், மாநில மருத்துவஅணி துணை செயலாளர் டாக்டர் வல்லபன், மாவட்ட துணைச்செயலாளர் தழுதாழை பாஸ்கர், பொருளாளர் ரவிச்சந்திரன், ஆலத்தூர் ஒன்றிய செயலாளர் கொளக்காநத்தம் கிருஷ்ணமூர்த்தி மற்றும் திராவிடர் கழகம் உள்ளிட்ட தோழமை கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதேபோல் அரியலூர் அண்ணாசிலை முன்பு மாவட்ட தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் சிவசங்கர் தலைமை தாங்கினார். மாநில இளைஞர் அணி துணை செயலாளர் சுபா சந்திரசேகரன் முன்னிலை வசித்தார். நகர செயலாளர் முருகேசன் வரவேற்று பேசினார். கொள்கை பரப்பு துணை செயலாளர் பெருநற்கிள்ளி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட துணை செயலாளர்கள் தனபால், லதாபாலு, ஒன்றிய, நகர, கிராம பொறுப்பாளர் கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்