தியேட்டருக்கு சினிமா பார்க்க சென்ற வாலிபர் சாவு கழிவறையில் பிணமாக கிடந்தார்

திருச்சியில் அதிக போதையுடன் தியேட்டருக்கு சினிமா பார்க்க சென்ற வாலிபர் கழிவறையில் இறந்து பிணமாக கிடந்தார்.

Update: 2018-09-18 23:00 GMT
திருச்சி,

திருமண விழா, பண்டிகை உள்ளிட்ட விசேஷங்களில் அளவு கடந்து மகிழ்ச்சியாக இருக்கவும், துக்க வீடுகளில் வேதனையை மறக்கவும் மது அருந்துவது இன்று வாடிக்கையாகி விட்டது. இன்று மது இல்லாமல் சிலருக்கு எந்த நிகழ்ச்சியும் இல்லை என்றாகிவிட்டது. மது விலை அதிகரித்ததால், அவ்வளவு பணம் கொடுத்து அதனை வாங்க முடியாத நிலையில் உள்ள இளைஞர்கள் பலர் இன்று குறைந்த விலையில் கிடைக்கும் போதை மாத்திரைகளுக்கும், போதை ஊசிகளுக்கும் அடிமையாகி வருகின்றனர்.

மேலும் சிலரை வாகன டியூப்களுக்கு பஞ்சர் ஒட்ட பயன்படுத்தும் திரவத்தை தீ வைத்து கொளுத்தி, அதில் இருந்து வரும் புகையை முகர்ந்து போதை ஏற்றும் வழக்கம் ஆட்கொண்டு விட்டது. இந்த போதையானது நேரடியாக நரம்புகளை செயலிழக்க செய்வதுடன் கண் பார்வையையும் மங்கச் செய்து விடும்.

பெற்றோர்கள் கண்ணில் மண்ணைத்தூவி, இளைஞர்கள் பலர் இதுபோன்ற போதை பழக்கத்தால் சீரழிந்து வருவது வேதனைக்குரியது. திருச்சியில் போதைக்கு அடிமையான இளைஞர் ஒருவர், சினிமா தியேட்டர் கழிவறையில் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டையை சேர்ந்தவர் அம்மாசி. இவருடைய மகன் கீர்த்திவாசன்(வயது25). இவர், போதை பழக்கம் உள்ளவர். மது, குட்கா போன்றவற்றுக்கு அடிமையான இவர், தவறான நண்பர்களுடன் பழக்கம் ஏற்பட்டு பஞ்சர் ஒட்ட பயன்படுத்தும் திரவத்தை தீ வைத்து கொளுத்தி அதன் புகையை முகர்ந்து போதை ஏற்றும் பழக்கத்திற்கு ஆளானார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு புத்தூர் பகுதியில் உள்ள தியேட்டர் ஒன்றில், கடைக்குட்டி சிங்கம் என்ற சினிமா பார்க்க கீர்த்திவாசன் சென்றார்.

ஏற்கனவே போதையில் இருந்த அவர், திடீரென்று இரவு 11.30 மணிக்கு கழிவறைக்கு சென்றார். பின்னர் அவர் இருக்கைக்கு வரவில்லை. இந்த நிலையில் நேற்று காலை 8 மணிக்கு கழிவறையை சுத்தம் செய்ய பணியாளர்கள் சென்றனர். அங்கு கீர்த்திவாசன் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதிக போதையில் கழிவறைக்கு சென்றபோது, அங்கு வழுக்கி விழுந்து அவர் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இது குறித்து தகவல் அறிந்த உறையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபிநாத் மற்றும் போலீசார் விரைந்து சென்று கீர்த்திவாசன் உடலை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். டாக்டர்கள் பிரேத பரிசோதனை அறிக்கையில், அளவுக்கு அதிகமான போதையால்தான் உயிரிழந்துள்ளார் என்றும், உடலில் எவ்வித காயமும் இல்லாததால் தவறி கீழே விழ வாய்ப்பில்லை என்றும், தெரிவித்துள்ளதாக போலீசார் கூறினர். பின்னர் அவருடைய உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இது குறித்து உறையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபிநாத் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்