செங்கோட்டையில் நடந்த கலவரம் தொடர்பாக மேலும் 7 பேர் கைது

செங்கோட்டையில் நடந்த கலவரம் தொடர்பாக மேலும் 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-09-18 21:30 GMT
செங்கோட்டை, 

செங்கோட்டையில் நடந்த விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது, கலவரம் வெடித்தது. இருதரப்பை சேர்ந்தவர்கள் மோதிக் கொண்டனர். அப்போது கார்கள், ஆட்டோக்கள், மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதனால் பதற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து செங்கோட்டையில் 144 தடை உத்தரவு வருகிற 22-ந் தேதி வரை அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இதையடுத்து அனைத்து இந்து சமுதாயத்தினர், முஸ்லிம் ஜமாத்தார்கள் உள்பட அனைவரையும் அழைத்து கலெக்டர் ஷில்பா பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் அனைவரும் ஒற்றுமையுடன் இருந்து ஒத்துழைப்பு கொடுக்கும்படி கேட்டுக் கொண்டார். தற்போது செங்கோட்டையில் இயல்பு நிலை திரும்பி உள்ளது.

இருந்தபோதிலும், அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் இருக்க தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. 3 போலீஸ் சூப்பிரண்டுகள், 6 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 8 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ராதாபுரம் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வெள்ளத்துரை பாதுகாப்பு பணிக்காக வந்துள்ளார்.

காசுக்கடை தெரு, வனத்துறை சோதனை சாவடி அருகில், வல்லம் ரோடு, மேலூர் உள்பட 9 இடங்களில் போலீஸ் சோதனை சாவடி அமைக்கப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கலவரம் தொடர்பாக ஏற்கனவே 19 பேரை செங்கோட்டை போலீசார் கைது செய்து இருந்தனர். நேற்று மேலும் 7 பேர் கைது செய்யப்பட்டனர். இதன்மூலம் இதுவரை 26 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். சிலரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்