நிலக்கரி இறங்குதளத்துக்கு எதிராக முற்றுகை: 1,030 மீனவர்கள் மீது வழக்கு

உடன்குடி அருகே கல்லாமொழியில் அமைக்கப்பட்டு வரும் நிலக்கரி இறங்கு தளத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டம் நடத்திய 1,030 மீனவர்கள் மீது கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2018-09-18 21:30 GMT
குலசேகரன்பட்டினம், 


தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே கல்லாமொழி கிழக்கு கடற்கரை சாலையில் ரூ.10 ஆயிரத்து 500 கோடி செலவில் அனல்மின் நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த அனல்மின் நிலையத்துக்கு தேவையான நிலக்கரியை கப்பலில் இருந்து கொண்டு வரும் வகையில், கல்லாமொழி கடற்கரையில் நிலக்கரி இறங்குதளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கடல் வழியாக கப்பலில் நிலக்கரி கொண்டு வரும்போது, கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களின் படகுகள், வலைகள் சேதமாகும். எனவே, இந்த இறங்குதளத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த மீனவர்கள் சாலை வழியாகவோ அல்லது ரெயில்வே தண்டவாளம் அமைத்தோ நிலக்கரி கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி நேற்று முன்தினம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 26 கடலோர கிராம நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் அவர்கள் படகுகளில் கருப்பு கொடி கட்டி, கடல் வழியாக சென்று கல்லாமொழியில் நிலக்கரி இறங்குதளம் அமைக்கும் இடத்தை முற்றுகையிட்டனர்.
இந்த நிலையில் நிலக்கரி இறங்குதளம் அமைக்கும் இடத்தை படகுகளில் சென்று முற்றுகையிட்டதாக 1,030 மீனவர்கள் மீது கூடங்குளம் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

அவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம்-147 (சட்ட விரோதமாக கூடுதல்), இந்திய தண்டனை சட்டம்-188 (அரசுக்கு எதிராக கருப்பு கொடி காட்டுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

மேலும் செய்திகள்