ஓசூர் அருகே கொலை செய்யப்பட்ட அ.தி.மு.க. பிரமுகர் உடலுடன் உறவினர்கள், பொதுமக்கள் போராட்டம்

ஓசூர் அருகே கொலை செய்யப்பட்ட அ.தி.மு.க. பிரமுகர் உடலுடன் உறவினர்கள், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமரசம் செய்தனர்.

Update: 2018-09-18 23:00 GMT
ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா தொரப்பள்ளி அக்ரஹாரத்தைச் சேர்ந்தவர் முனிராஜ் (வயது 33). அ.தி.மு.க. பிரமுகர். ரோடு காண்டிராக்ட் தொழில் செய்து வந்தார். கடந்த 15-ந் தேதி அ.தி.மு.க. சார்பில் நடந்த அண்ணா பிறந்த நாள் விழாவில் பங்கேற்பதற்காக தனது மோட்டார்சைக்கிளில் பாகலூர் சாலையில் உள்ள கட்சி அலுவலகம் அருகில் வந்தார். அதன் பிறகு மாயமான முனிராஜை உறவினர்கள் தேடினர். இதுபற்றி அட்கோ போலீசாரும் வழக்குப்பதிவு செய்து முனிராஜை தேடி வந்தனர்.

இந்த நிலையில் முனிராஜ், ஆனேக்கல் - அத்திப்பள்ளி இடையே பிருந்தாவன் கார்டன் என்ற இடத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது தொடர்பாக கர்நாடக மாநிலம் ஆனேக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆனேக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நேற்று பிற்பகல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. உடலை பெற்றுக் கொண்டு ஆம்புலன்ஸ் வாகனத்தில் கொண்டு வந்த உறவினர்கள் தொரப்பள்ளி அக்ரஹாரத்தின் நுழைவு பகுதியில் உடலுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தொரப்பள்ளி அக்ரஹாரம் பகுதி பொதுமக்களும் போராட்டத்தில் கலந்து கொண்டனர். முனிராஜ் கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மீனாட்சி (ஓசூர்), சங்கர் (தேன்கனிக்கோட்டை), போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் லட்சுமணதாஸ் (ஓசூர் டவுன்), பெரியசாமி (அட்கோ), சரவணன் (சிப்காட்), முருகன் (சூளகிரி) மற்றும் போலீசார் அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்கள். கொலையில் தொடர்புடைய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தனர்.

இதற்கிடையே முனிராஜின் உடலுக்கு தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி நேற்று மாலை அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி, இந்த கொலையில் தொடர்புடைய நபர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், என்று உறுதி அளித்தார். இதைத் தொடர்ந்து முனிராஜ் உடலை உறவினர்கள் அடக்கம் செய்ய எடுத்து சென்றனர்.

இந்த கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன் பேரில் கொலையாளிகளை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்