நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் - கலெக்டர் ஆசியா மரியம் அறிவுறுத்தல்

ஏரி, குளம் மற்றும் வாய்க்கால் போன்ற நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என கலெக்டர் ஆசியா மரியம் அறிவுறுத்தி உள்ளார்.

Update: 2018-09-18 23:30 GMT
நாமக்கல்,

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனைக்கூட்டம் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் ஆசியாமரியம் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், தமிழ்நாடு மின்சார வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்களுடன் வடகிழக்கு பருவமழை காலத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கலெக்டர் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் அவர் பேசும்போது கூறியதாவது:-

பொதுப்பணித்துறையினர் மற்றும் ஊரக வளர்ச்சித்துறையினர் மழைக்காலங்களில் மழைநீர் செல்ல கூடிய பகுதிகளில் உள்ள நீர் தேக்கங்கள் மற்றும் கால்வாய்களை தூர்வாரி சுத்தம் செய்ய வேண்டும். ஏரி, குளம், வரத்து வாய்க்கால்கள், நீர் நிலைகளில் உள்ள தடைகள் மற்றும் ஆக்கிரமிப்புகள் உடனடியாக அகற்றப்பட வேண்டும். வாய்க்கால்கள் மற்றும் ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டு உள்ள தடுப்பணைகள் பழுது ஏற்பட்டு இருப்பின், அந்த பழுதுகளை சரிசெய்ய வேண்டும். மணல் மூட்டைகள், சவுக்கு கட்டைகள் சேகரித்து இருப்பு வைக்க வேண்டும்.

சுகாதாரத்துறையினர் மழைக்காலங்களில் அரசு மருத்துவமனைகளில் மருந்துகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். நடமாடும் மருத்துவக்குழுவினர் மற்றும் அவசர ஊர்தி வாகனங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். வெள்ளநீர் தேங்கும் இடங்களில் சுகாதாரம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குடிநீரில் தேவையான அளவு குளோரின் தெளிக்க வேண்டும்.

வருவாய்த்துறையினர் நிவாரண முகாம்களின் பட்டியலை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். கூடுதல் தேவைக்காக தற்காலிகமான இடங்களை தேர்வு செய்ய வேண்டும். உதவி கலெக்டர்கள் மழைமானி நல்ல நிலையில் உள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும். மேலும் வடகிழக்கு பருவமழை காலங்களில் தாசில்தார்கள் மழைஅளவு மற்றும் இதர சேதங்கள் குறித்த அறிக்கையை ஒவ்வொரு நாளும் காலை 7 மணிக்குள் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு தவறாமல் தெரிவிக்க வேண்டும்.

வடகிழக்கு பருவமழையினால் ஏற்படும் பேரிடர் தொடர்பாக பொதுமக்கள் உடனுக்குடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும் தொலைபேசி எண்- 1077 மற்றும் 04286-281377-ல் தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பழனிச்சாமி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பால் பிரின்ஸ்லி ராஜ்குமார் உள்பட அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்