தனியார் பஸ் டிரைவரை அரசு பஸ் கண்டக்டர் கடித்ததால் பரபரப்பு

கும்பகோணம் பஸ் நிலையத்தில் ஏற்பட்ட மோதலில் தனியார் பஸ் டிரைவரை அரசு பஸ் கண்டக்டர் கடித்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2018-09-18 21:30 GMT
கும்பகோணம், 


தஞ்சை பழைய பஸ் நிலையத்திலிருந்து நேற்று மதியம் 12 மணியளவில் ஒரு அரசு பஸ் சென்னை நோக்கி புறப்பட்டது. பஸ்சை வயலூரை சேர்ந்த கார்த்தி (வயது35) என்பவர் ஓட்டினார். கண்டக்டராக வயலூரை சேர்ந்த காந்தி(44) பணியில் இருந்தார்.

இதே நேரத்தில் தஞ்சையில் இருந்து ஒரு தனியார் பஸ் கும்பகோணம் நோக்கி புறப்பட்டது. இந்த பஸ்சில் ஒரத்தநாடு அருகே உள்ள சோழபுரம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன்(31) டிரைவராகவும், கண்டக்டராக கந்தர்வக்கோட்டை அருகே உள்ள நொடியூரை சேர்ந்த ரா.முருகேசனும்(36) பணியில் இருந்தனர். தஞ்சையில் இருந்து இந்த 2 பஸ்களும் புறப்படும் போதே 2 பஸ்களின் டிரைவர் மற்றும் கண்டக்டர்களிடையே தகராறு ஏற்பட்டது. இந்த 2 பஸ்களும் அய்யம்பேட்டைக்கு வந்த போது பஸ் நிலையத்தில் பயணிகளை இறக்கி விட்ட போது 2 பஸ்களின் டிரைவர் மற்றும் கண்டக்டர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த தனியார் பஸ் டிரைவர் ராஜகிரி பஸ் நிறுத்தத்தில் வைத்து அரசு பஸ்சை முந்தி சென்று அரசு பஸ்சின் குறுக்கே தனது பஸ்சை நிறுத்தினார். இதனால் ராஜகிரி பஸ் நிறுத்தத்தில் வைத்து இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எனவே பொதுமக்கள் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து 2 பஸ்களையும் கும்பகோணம் நோக்கி அனுப்பி வைத்தனர்.

இந்தநிலையில் நேற்று மதியம் 2 மணி அளவில் கும்பகோணம் பஸ் நிலையத்துக்கு 2 பஸ்களும் வந்து சேர்ந்தன. அப்போது தங்களது பஸ்களில் இருந்து இறங்கிய 2 பஸ்களின் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களிடையே மோதல் ஏற்பட்டு இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் பயங்கரமாக தாக்கி கொண்டனர். அப்போது அரசு பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டருக்கு ஆதரவாக, மற்ற அரசு பஸ்களின் டிரைவர், கண்டக்டர்கள் ஒன்று சேர்ந்து தனியார் பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டரை சரமாரியாக அடித்து உதைத்தனர். இதில் தனியார் பஸ் டிரைவர் ராஜேந்திரனின் மூக்கு உடைந்தது. அப்போது அரசு பஸ் கண்டக்டர், தனியார் பஸ் டிரைவர் ராஜேந்திரனின் இடது மார்பில் கடித்தார். இதில் ராஜேந்திரன் பலத்த காயமடைந்தார். இதனால் கும்பகோணம் பஸ் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து அரசு - தனியார் பஸ்களின் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் கும்பகோணம் மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்