விடுதியில் அடிப்படை வசதிகள் செய்ய கோரி அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்

விடுதியில் அடிப்படை வசதிகள் செய்ய கோரி வகுப்புகளை புறக்கணித்து அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-09-18 23:16 GMT

கோவை,

கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில் அரசு கலைக்கல்லூரி மாணவர் விடுதி உள்ளது. இந்த விடுதியில் 300–க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இந்த விடுதியில் அடிப்படை வசதிகள் செய்துதரக்கோரி நேற்று கோவை அரசு கலைக்கல்லூரி முன்பு மாணவர்கள் 100–க்கும் மேற்பட்டவர்கள் திரண்டனர்.

பின்னர் அவர்கள் வகுப்புகளை புறக்கணித்து, கல்லூரி நுழைவு வாயில் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கூறியதாவது:–

விடுதியில் உள்ள 2 கட்டிடங்களில் ஒன்று மிகவும் சிதிலமடைந்து காணப்படுகிறது. இந்த இரு கட்டிடங்களிலும் மொத்தம் 62 அறைகள் உள்ளன. இதில் ஒரு அறையில் 5 பேர் முதல் 8 பேர் வரை தங்கி உள்ளோம். இங்குள்ள கதவுகள் சரியில்லாமல் உள்ளன. விடுதியில் உணவுக்காக கடந்த கல்வி ஆண்டில் நாள் ஒன்றுக்கு ரூ.55 வழங்கி வந்தோம்.

தற்போது பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி ரூ.65 ஆக உயர்த்தப்பட்டது. ஆனால் அந்த உணவு தரமற்றதாக உள்ளது. இங்குள்ள கழிவறைகள் சரியான முறையில் பராமரிக்கப்படாமல் சுகாதாரமின்றி உள்ளது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது.

விடுதி காப்பாளர் மாணவர்கள் தங்கி இருக்கும் அறைகளில் உள்ள குறைகளை கேட்பதே இல்லை. இதுதொடர்பாக அவரிடம் தெரிவித்தாலும் கண்டுகொள்வதில்லை. எனவே விடுதியில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய கல்லூரி பேராசிரியர்கள், அவர்களை சமாதானப்படுத்தி கல்லூரி முதல்வர் கே.சித்ராவிடம் அழைத்து சென்றனர். பின்னர் அவர் மாணவர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதையடுத்து மாணவர்கள் கலைந்து சென்றனர்.

இதுகுறித்து விடுதியில் தங்கி உள்ள மாணவர்கள் கூறியதாவது:–

விடுதியில் நாங்கள் தங்கியிருக்கும் அறைகளில் மூட்டைப்பூச்சிகள் அதிகளவு உள்ளது. இதனால் தினமும் தூங்க முடியாமல் அவதியடைகிறோம். ஆடைகளுக்குள் மறைத்து இருக்கும் மூட்டைப்பூச்சி நாங்கள் வகுப்பில் பாடம் படித்துக்கொண்டு இருக்கும்போது வெளியே வருவதை பார்த்து சக மாணவர்கள் எங்களை கிண்டல் செய்கிறார்கள். இதுதவிர எங்கள் பைகளிலும் மூட்டைப்பூச்சிகள் புகுந்து விடுகின்றன. நாங்கள் ஊருக்கு சென்றால் வீடுகளிலும் மூட்டைப்பூச்சி குடிகொள்ளும் நிலை உருவாகி உள்ளது. எனவே கல்லூரி நிர்வாகம் முன்வந்து மூட்டைப்பூச்சி மருந்து தெளித்து, அதன் பாதிப்பை தடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்