மன்னர் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து தர்ணா போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மன்னர் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-09-18 23:33 GMT
புதுக்கோட்டை,

புதுக்கோட்டையில் மன்னர் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த மாணவர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி நுழைவுவாயில் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இலவச பயணசீட்டு உடனடியாக வழங்க வேண்டும். வகுப்பறைகளுக்கு போதுமான மின்சார வசதி ஏற்படுத்தித்தர வேண்டும். இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கழிவறை களை சுத்தம் செய்ய வேண்டும். மழைக்காலங்களில் கல்லூரி வளாகத்தில் அதிக அளவில் கொசு தொல்லை இருப்பதால், கொசு மருந்து அடிக்க வேண்டும்.

கடந்த 4 ஆண்டுகளாக நாட்டு நலப்பணித்திட்ட முகாமிற்கு மாணவ, மாணவிகளை அழைத்து செல்லவில்லை. எனவே இந்த ஆண்டு மாணவ, மாணவிகளை நாட்டு நலப்பணித்திட்ட முகாமிற்கு அழைத்து செல்ல வேண்டும். குடிநீர் தொட்டிகளை சரியான முறையில் பராமரிக்க வேண்டும். விடுதியில் மாணவ, மாணவிகளுக்கு தரமான உணவுகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தர்ணா போராட்டம் நடைபெற்றது. இது குறித்து தகவல் அறிந்த கல்லூரி நிர்வாகத்தினர் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து மாணவர்கள் தர்ணா போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்