அமைச்சர், டி.ஜி.பி. பதவி விலகக்கோரி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

குட்கா ஊழலில் குற்றம்சாட்டப்பட்ட அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி.ராஜேந்திரன் ஆகியோர் உடனடியாக பதவி விலகக்கோரி தி.மு.க.வினர் உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-09-18 22:00 GMT
திருவண்ணாமலை,


திருவண்ணாமலை வடக்கு, தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் திருவண்ணாமலை உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினரும், எம்.எல்.ஏ.வுமான எ.வ.வேலு தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.சிவானந்தம், தணிக்கை குழு உறுப்பினரும், எம்.எல்.ஏ. வுமான கு.பிச்சாண்டி, மாவட்ட அவைத் தலைவர் த.வேணுகோபால், எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, கே.வி.சேகரன், எஸ்.அம்பேத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசின் அவலங்களை கண்டித்தும், குட்கா ஊழலில் குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. ராஜேந்திரன் ஆகியோர் உடனடியாக பதவி விலக வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் எ.வ.வேலு எம்.எல்.ஏ. பேசியதாவது:-

முதல்-அமைச்சராக கருணாநிதி பதவி வகித்தபோது இந்த மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டது. இன்றைக்கு 7 ஆண்டு காலமாக ஒரு துரும்பைக் கூட இந்த மாவட்டத்திற்காக செய்யாமல் ஆங்காங்கே மேடைப்போட்டுகொண்டு பேசுகிறார்கள். இந்த ஆட்சியின் சாதனை என்னவென்றால் அரசாங்கம் கடன் பெற்றதன் மூலம் தமிழ்நாட்டில் வாழும் தனிநபர் ஒவ்வொருவரின் மீதும் ரூ.45 ஆயிரம் கடன் தான் உள்ளது.

குட்கா பதுக்கி வைக்கப்பட்டு இருந்த சம்பவம் தொடர்பாக 40 இடங்களில் சோதனை நடந்தது. காவல் துறை உயர் அதிகாரி, அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் வீட்டில் சோதனை நடந்தது. இதன் மூலம் தமிழ்நாடே தலை குனியும் நிலையை இன்று உருவாகி உள்ளது. தமிழகத்தில் எந்த துறையை எடுத்தாலும் ஊழல் தான். எனவே எடப்பாடி பழனிசாமி அரசு ராஜினாமா செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் தெற்கு மாவட்ட துணை செயலாளர் சாவல்பூண்டி மா.சுந்தரேசன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன், மாவட்ட பொருளாளர் எஸ்.பன்னீர்செல்வம், மாவட்ட அமைப்பாளர் சி.என்.அண்ணாதுரை, டாக்டர் எ.வ.வே.கம்பன் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்