தொழிலதிபரை கொலை செய்ய முயன்ற வழக்கு மேலும் ஒருவரை பிடித்து விசாரணை

தொழிலதிபரை கொலை செய்ய முயன்ற வழக்கில் மேலும் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2018-09-19 21:45 GMT
தஞ்சாவூர்,


தஞ்சை அருளானந்த நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது65). தொழில்அதிபரான இவர் தஞ்சையில் கல்வி நிறுவனங்கள், இருசக்கர வாகன ஷோரூம் போன்றவற்றை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி ராதிகாராணி. இவர் தஞ்சை அரசு மருத்துவமனையில் டாக்டராக உள்ளார்.

சம்பவத்தன்று இளங்கோவன் மருத்துவக்கல்லூரி முதல் கேட் எதிரே உள்ளது தனது இருசக்கர வாகன ஷோரூமில் போர்வெல் போடும் பணி நடைபெறுவதை பார்வையிடுவதற்காக வந்தார். அப்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் அவரை இரும்புக்கம்பியால் தாக்கி அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடி விட்டது.

இதில் காயம் அடைந்த இளங்கோவனை சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து இளங்கோவன் மருத்துவக் கல்லூரி போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீசார் டாக்டர்கள் பாரதிமோகன், ஆனந்தசேகர், அனுசியா, ஜெயஸ்ரீ, அகிலா ஸ்ரீ, கலைச்செல்வி மற்றும் 4 பேர் என 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இது தொடர்பாக குற்றவாளிகளை பிடிக்க தஞ்சை நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் பெரியசாமி, ராஜகோபால், பழனிசாமி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சுகுமாறன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப் பட்டது.
இந்த நிலையில் தனிப்படையினர் தஞ்சை கோரிகுளம் புதுத்தெருவை சேர்ந்த முருகன், திருமங்கலக்கோட்டை கீழையூரை சேர்ந்த கவுதம் ஆகிய 2 பேரை நேற்று முன்தினம் பிடித்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் சூரக்கோட்டையை சேர்ந்த கார்த்திக் என்பவரையும் நேற்று பிடித்தனர். தொடர்ந்து 3 பேரிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் தொழிலதிபர் இளங்கோவனின் மகன் அபினேஷ் (28) தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாரிடம் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அதில், “தஞ்சை திலகர் திடல் அருகே உள்ள ஒரு மருத்துவமனையை நாங்கள் ஏலத்துக்கு எடுத்தோம். அது எங்கள் நிறுவனத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் மருத்துவமனை இன்னும் ஒப்படைக்கப்படவில்லை. மேலும் அந்த மருத்துவமனையை சேர்ந்த டாக்டர் உள்ளிட்டவர்கள் எங்கள் குடும்பத்தினர் அனைவரையும் கொன்றுவிடுவோம் என மிரட்டல் விடுத்தனர். இது குறித்து போலீசில் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. போலீசார் நடவடிக்கை எடுக்க தவறியதால் தான் இந்த கொலை முயற்சி தாக்குதல் நடந்துள்ளது. எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எங்கள் குடும்பத்தினர் அனைவரது உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்”என அதில் கூறி உள்ளார். 

மேலும் செய்திகள்