கூடலூர்– கேரளா சாலை விரைவாக சீரமைக்கப்படுமா? வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு

பலத்த மழையால் 80 மீட்டர் நீளத்துக்கு விரிசல் ஏற்பட்ட கூடலூர்– கேரள சாலை விரைவாக சீரமைக்கப்படுமா? என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.

Update: 2018-09-19 22:15 GMT

கூடலூர்,

கூடலூர் பகுதியில் கடந்த 3 மாதங்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்தது. இதனால் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. இதேபோல் கேரளா மாநிலம் வயநாடு, மலப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. இதனால் வயநாடு மாவட்டத்துக்கு செல்லும் சாலைகள் சேதமடைந்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இதனால் கூடலூர் வழியாக போக்குவரத்து திருப்பி விடப்பட்டது.

கூடலூரில் இருந்து கீழ்நாடுகாணி வழியாக கேரளாவுக்கு நெடுஞ்சாலை செல்கிறது. தொடர் பலத்த மழை காரணமாக கடந்த மாதம் கூடலூர்– கேரள எல்லையான கீழ்நாடுகாணி அண்ணா நகர் பகுதியில் சாலையின் நடுவில் 80 மீட்டர் நீளத்துக்கு விரிசல் ஏற்பட்டது. இதனால் அந்த ரோட்டில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அந்த இடத்தை மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு கனரக வாகனங்கள் செல்ல தடை விதித்தனர்.

பின்னர், கார்கள் உள்பட சிறிய ரக வாகனங்கள் மட்டும் ஒருவழியாக இயக்கப்பட்டன. மழை நின்ற உடன் சாலையை சீரமைக்கும் பணி தொடங்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட் டது. தற்போது கேரளா மற்றும் கூடலூர் பகுதியில் மழை நின்று விட்டதால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விட்டனர்.

விரிசல் ஏற்பட்ட சாலை வழியாக கனரக வாகனங்களும் இயக்கப்பட்டு வருகின்றன. கேரளாவில் இருந்து சுற்றுலா பயணிகளின் வாகனங்களும் அந்த சாலை வழியாகவே வந்து செல்கின்றன. இதனால் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது. ஆனால் விரிசல் ஏற்பட்ட சாலையை சீரமைக்கும் பணி இது வரை தொடங்க வில்லை. எனவே இனி வரும் காலங்களில் சீரமைப்பு பணியை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:–

தமிழக– கேரளாவை இணைக்கும் முக்கிய சாலையான கூடலூர்– கேரளா சாலையில் விரிசல் ஏற்பட்டு 1 மாதம் ஆகிறது. ஆனால் இதுவரை சீரமைப்பு பணியை தொடங்க வில்லை. இதே போல் கூடலூரில் இருந்து சுல்தான்பத்தேரிக்கு செல்லும் சாலையில் புஷ்பகிரி என்ற இடத்திலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. அங்கும் சாலை சீரமைப்பு பணியை தொடங்க வில்லை.

ஆனாலும் கனரக வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் அந்த சாலையில் தற்போது சென்று வருகின்றன. அண்டை மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. இதனால் இரவு நேரத்தில் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே கூடலூர்– கேரளா சாலையை சீரமைக்க அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்