ஓசூர் அருகே சாந்தபுரம் ஏரியில் செத்து மிதந்த மீன்கள்

ஓசூர் அருகே சாந்தபுரம் ஏரியில் மீன்கள் செத்து மிதந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-09-19 23:30 GMT
ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சாந்தபுரம் ஏரி உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக போதிய மழை இல்லாத காரணத்தால் இந்த ஏரி வறண்டு காணப்பட்டது. பின்னர் தொடர் மழை காரணமாகவும், பேடரப்பள்ளி ஏரியில் இருந்து தண்ணீர் வரத்து உள்ளதாலும் தற்போது சாந்தபுரம் ஏரி நீர் நிரம்பி காணப்படுகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் சாந்தபுரம் ஏரியில் திடீரென ஆயிரக்கணக்கான சிறிய மற்றும் பெரிய மீன்கள் செத்து மிதந்தன. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசியது. மீன்கள் ஏரியில் செத்து மிதந்ததை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், பேடரப்பள்ளி ஏரியில் இருந்து வரும் தண்ணீரால் தான் மீன்கள் இறந்திருக்கலாம். பேடரப்பள்ளி ஏரி அருகே ஏராளமான தனியார் நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களில் இருந்து வெளியேற்றப்படும் ரசாயனம் கலந்த கழிவுகள், பேடரபள்ளி ஏரியில் கலப்பதால் தண்ணீர் மாசடைந்து வருகிறது. மேலும் இந்த கழிவு கலந்த தண்ணீர் சாந்தபுரம் ஏரிக்கு செல்வதால் அந்த ஏரி நீரும் மாசடைந்துள்ளது. அதன் காரணமாக மீன்கள் செத்து மிதக்கின்றன என்றனர்.

மேலும் தனியார் நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஏரியில் கலக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கிடையே மாசு கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் மற்றும் ஓசூர் நகராட்சி அலுவலர்கள் நேற்று சாந்தபுரம் ஏரிக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மேலும் ஏரி நீரை ஆய்வுக்கு கொண்டு செல்லவும், ஏரியில் செத்து மிதந்த மீன்களை அப்புறப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஓசூர் அருகே ஏரியில் மீன்கள் செத்து மிதந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்