குமாரபாளையத்தில் பரபரப்பு: போலீஸ் நிலையம் முன்பு பெண் தீக்குளிப்பு

பண மோசடி குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை என போலீஸ் நிலையம் முன்பு பெண் தீக்குளித்தார்.

Update: 2018-09-19 23:00 GMT
குமாரபாளையம்,

குமாரபாளையத்தில் பண மோசடி குறித்து போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி, போலீஸ் நிலையம் முன்பு நேற்று பெண் ஒருவர் தீக்குளித்தார். அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

கோவை பீளமேடு பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வருபவர் சேகர். இவருடைய மனைவி பார்வதி (வயது 46). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இவர்களில் மகளுக்கு திருமணம் ஆகி விட்டது. இந்த நிலையில் இவர்களுக்கு சொந்தமான காரில் மாற்று டிரைவராக நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் ராஜராஜன் நகரை சேர்ந்த ஈஸ்வரன்(44) என்பவர் வேலை செய்து வந்தார். இவர் வேலை நிமித்தமாக சேகரின் வீட்டுக்கு சென்று வந்த போது, அவருடைய மனைவியுடன் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது.

இதையறிந்த சேகருக்கும், அவருடைய மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் சேகர், மனைவி மற்றும் குழந்தைகளை விட்டு பிரிந்து செல்ல முடிவு செய்து வீட்டில் இருந்து வெளியேறி விட்டார். இதையடுத்து பார்வதி அங்குள்ள சொத்துகளை விற்றுவிட்டு, குமாரபாளையத்தில் உள்ள சடையம்பாளையம் காந்தி நகரில் தனது மகனுடன் வாடகை வீட்டில் குடியேறினார்.

இதைத்தொடர்ந்து ஈஸ்வரன், பார்வதியின் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் இடையே பணம் கொடுக்கல், வாங்கலும் இருந்ததாகவும், ரூ.1 கோடியே 30 லட்சத்தை ஈஸ்வரன், பார்வதியிடம் இருந்து வாங்கிக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சமீபகாலமாக ஈஸ்வரன், பார்வதியின் வீட்டுக்கு செல்லவில்லை. இதையடுத்து 1 கோடியே 30 லட்சம் ரூபாயை தன்னிடம் வாங்கிக்கொண்டு திருப்பி தரவில்லை என்று கூறி, குமாரபாளையம் போலீஸ் நிலையத்தில் ஈஸ்வரன் மீது பார்வதி சமீபத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், ஈஸ்வரனும், அவருடைய அண்ணன் ஜம்பு மற்றும் ஈஸ்வரனின் மனைவி மலர்க்கொடி ஆகியோர் பார்வதியிடம் போலீசில் புகார் கொடுத்தது தொடர்பாக மிரட்டல் விடுத்தனராம். ஏற்கனவே தன்னிடம் பணத்தை வாங்கி கொண்டு மோசடி செய்து விட்டு ஈஸ்வரன் குடும்பத்தினர் மிரட்டல் விடுக்கிறார்களே என்று கூறி ஆத்திரம் அடைந்த பார்வதி நேற்று மாலையில் குமாரபாளையம் போலீஸ் நிலையத்திற்கு மண்எண்ணெய் கேனுடன் வந்தார்.

அங்கு அவர் போலீசார் தனது புகாரின் பேரில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறியபடி, தான் கொண்டு வந்த கேனில் இருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் அவரது உடலில் தீப்பற்றி எரிந்தது. அவரின் அலறல் சத்தம் கேட்டு போலீஸ் நிலையத்தில் இருந்து வெளியே வந்த போலீசார், உடனடியாக அவர் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.

பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில், குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட பார்வதி பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து குமாரபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்