கர்ப்பிணியை தாக்கியதில் கரு கலைந்த சம்பவம் 2 தம்பதிகளுக்கு ஜெயில் தண்டனை

வேலூர் அருகே கர்ப்பிணியை தாக்கியதில் கரு கலைந்த வழக்கில் 2 தம்பதிகளுக்கு வேலூர் கோர்ட்டில் ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டது. மேலும் சரியாக வழக்குப்பதிவு செய்யாத இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Update: 2018-09-19 22:44 GMT
வேலூர், 


வேலூரை அடுத்த மேட்டு இடையம்பட்டி மாந்தோப்புமேடு பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 46), இவருடைய அண்ணன் ஏழுமலை (54). இவர்கள் இருவரும் மாட்டுவண்டியை வைத்து தொழில்செய்து வருகிறார்கள். கடந்த 7.4.2013 அன்று இருவரும் மாட்டு வண்டியில் மணல் ஏற்றி வந்தனர்.

அப்போது அதே கிராமத்தில் உள்ள சங்கர் என்பவருடைய வீட்டின் முன்னால் வந்தபோது சங்கரின் வீட்டு வாசற்படியில் மாட்டுவண்டி ஏறிஉள்ளது. இதை பார்த்த சங்கரின் மனைவி சுதா தட்டிக்கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ராமசாமி, அவருடைய மனைவி லதா (37), ராமசாமியின் அண்ணன் ஏழுமலை, அவருடைய மனைவி சாந்தி (49) ஆகிய 4 பேரும் சேர்ந்து சுதாவுடன் தகராறு செய்தனர். மேலும் அவருடைய வயிற்றில் தாக்கினர்.

சுதா 6 மாத கர்ப்பிணியாக இருந்ததால் அவருக்கு வலி ஏற்பட்டது. உடனே அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் ஸ்கேன் எடுத்து பார்த்தனர். அப்போது வயிற்றில் இருந்த கரு கலைந்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அவர்கள் சான்றிதழும் வழங்கினர்.

இந்த சம்பவம் குறித்து அப்போது பாகாயம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக இருந்த தீபா என்பவர் கொலைவழக்காக பதிவு செய்யாமல், அடி-தடி வழக்காக பதிவு செய்துள்ளார். மேலும் இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு விசாரணை வேலூர் முதலாவது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடைபெற்றது. வழக்கு விசாரணை முடியும் தருவாயில் இது கொலை வழக்கு என்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை அங்கிருந்து மாவட்ட கூடுதல் கோர்ட்டிற்கு மாற்றப்பட்டது.

நீதிபதி குணசேகரன் வழக்கை விசாரித்தார். அப்போது இது கொலை வழக்கு என்பது உறுதி செய்யப்பட்டது. விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. ராமசாமிக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ. 4,500 அபராதமும் விதித்து நீதிபதி குணசேகரன் தீர்ப்பு கூறினார்.
லதா, ஏழுமலை, சாந்தி ஆகிய 3 பேருக்கும் தலா ஒரு வருடம் ஜெயில்தண்டனை, தலா ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட சுதாவுக்கு, தண்டனை பெற்ற ராமசாமி உள்பட 4 பேரும் தலா ரூ.2,500 வீதம் மொத்தம் ரூ.10 ஆயிரம் இழப்பீடாக வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

கொலை வழக்குப்பதிவு செய்வதற்கு பதில் சாதாரண அடி-தடி வழக்காக பதிவு செய்து, அதை அதிகாரிகளுக்குக்கூட தெரிவிக்காத அப்போது சப்-இன்ஸ்பெக்டராக இருந்த தீபா (தற்போது கடலூரில் இன்ஸ்பெக்டராக பணிபுரிகிறார்) மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

மேலும் செய்திகள்