தாம்பரம் காந்தி சாலையில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து தேங்கி நிற்பதால் பொதுமக்கள் அவதி

தாம்பரம் காந்தி சாலையில் மழைநீருடன் கழிவுநீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே கால்வாயை தூர்வாரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2018-09-19 23:04 GMT

தாம்பரம்,

சென்னையை அடுத்த தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையில் இருந்து பெருங்களத்தூர், முடிச்சூர், தர்காஸ் போன்ற பகுதிகளுக்கு மேற்கு தாம்பரம் பகுதியில் உள்ள காந்தி சாலை வழியாக ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்த சாலையும், ராஜாஜி சாலையும் சந்திக்கும் பகுதியில் சேவாசதன் பள்ளி அருகே உள்ள மழைநீர் கால்வாய்கள் பல வருடங்களாக தூர்வாரப்படவில்லை. இந்த பகுதியில் ஏராளமான வாகனங்களும் நிறுத்தப்பட்டு உள்ளது.

தற்போது பெய்துவரும் மழை சுமார் அரைமணிநேரம் நீடித்தாலே இந்த பகுதியில் சாலையில் சுமார் 2 அடி உயரத்துக்கு மழைநீர் தேங்கி, வாகனங்கள் செல்லமுடியாத நிலை உள்ளது. மழைநீரோடு கழிவுநீரும் கலந்து இந்த பகுதியில் தேங்கி நிற்பதால் மழை விட்டாலும் சாலையில் பொதுமக்கள் நடந்துபோக முடியாத நிலைஉள்ளது.

தினமும் ஏராளமான மாணவ–மாணவிகள், பொதுமக்கள் பயன்படுத்தும் இந்த சாலையில் கழிவுநீர் தேங்குவதால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மழைநீர் கால்வாய் தூர்வாரப்படாமல் அடைப்பு ஏற்பட்டு உள்ளதால் தண்ணீர் வெளியேற வழியில்லாமல் சாலையில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் கொசு உற்பத்தியும் அதிகரித்துள்ளது.

எனவே இந்த பகுதியில் உள்ள மழைநீர் கால்வாய்களை தூர்வாரி, மழைநீர் சீராக செல்லும் வகையில் தாம்பரம் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்