புளியந்தோப்பில் பரிதாபம்: தண்ணீர் லாரி சக்கரத்தில் சிக்கி இளம்பெண் பலி

புளியந்தோப்பில், தண்ணீர் லாரி சக்கரத்தில் சிக்கி இளம்பெண் பரிதாபமாக இறந்தார். அவருடைய நண்பர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

Update: 2018-09-19 23:11 GMT
திரு.வி.க.நகர்,

சென்னை கொடுங்கையூர் காந்தி நகரைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவருடைய மகள் ஷர்மிளா (வயது 23). இவர், சென்னை அண்ணாசாலையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் வேலை செய்து வந்தார்.

நேற்று மதியம் ஷர்மிளா, தனது நண்பரான மாதவரத்தை சேர்ந்த கோபி(21) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வியாசர்பாடியில் இருந்து புரசைவாக்கம் நோக்கி சென்றார். புளியந்தோப்பு அம்பேத்கர் கலைக்கல்லூரி நெடுஞ்சாலையில் ஆட்டுதொட்டி எதிரே அவர்கள் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அவர்களுக்கு முன்னால் தண்ணீர் லாரி சென்று கொண்டிருந்தது. கோபி, தண்ணீர் லாரியை முந்திச்செல்ல முயன்றார். அப்போது எதிரே மற்றொரு வாகனம் வந்ததால் நிலைதடுமாறி இருவரும் மோட்டார்சைக்கிளில் இருந்து கீழே விழுந்தனர்.

இதில் ஷர்மிளா மீது தண்ணீர் லாரியின் பின்பக்க சக்கரம் ஏறி இறங்கியது. இதில் ஷர்மிளா, உடல் நசுங்கி அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். அவருடைய நண்பரான கோபி, கையில் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த கீழ்பாக்கம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் பலியான ஷர்மிளா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கையில் காயம் அடைந்த கோபிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதற்கிடையில் விபத்து நடந்த உடன், தண்ணீர் லாரி டிரைவரான விழுப்புரத்தை சேர்ந்த தண்டபாணி(44), புளியந்தோப்பு போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். இதுபற்றி கீழ்ப்பாக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்