கோட்டூர் அருகே பட்டப்பகலில் துணிகரம்: ஆசிரியர் தம்பதி வீட்டின் கதவை உடைத்து 54 பவுன் நகைகள் கொள்ளை

கோட்டூர் அருகே ஆசிரியர் தம்பதி வீட்டின் கதவை உடைத்து 54 பவுன் நகைகள்-ரூ.35 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2018-09-20 01:26 GMT
கோட்டூர், 

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே உள்ள காசன்குளம் மெயின் ரோட்டில் வசித்து வருபவர் கணேசன்(வயது 52). இவர், சவளக்காரன் அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சாந்தி(45). இவர், திருராமேஸ்வரம் நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

நேற்று காலை 9 மணியளவில் கணேசனும் அவருடைய மனைவியும் தங்களது வீட்டை பூட்டி விட்டு தங்கள் மகன் படிக்கும் பள்ளியில் அவனை கொண்டு சென்று விட்டனர். பின்னர் அங்கிருந்து தங்களது பள்ளிக்கு பணிக்கு சென்று விட்டனர்.

ஆசிரியர் தம்பதியினர் தினமும் வீட்டை பூட்டி விட்டு பள்ளிக்கு செல்வதை தெரிந்து கொண்ட மர்ம நபர்கள் அந்த வீட்டில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டினர். இதற்கான சந்தர்ப்பத்திற்காக காத்து இருந்தனர். நேற்று வழக்கம்போல் ஆசிரியர் தம்பதியினர் வீட்டை பூட்டி விட்டு பள்ளிக்கு சென்று விட்டதை தெரிந்து கொண்டதும் மர்ம நபர்கள் கணேசன் வீட்டிற்கு வந்து உள்ளனர்.

அங்கு வந்த அவர்கள், வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்று உள்ளனர். பின்னர் வீட்டில் இருந்த 2 பீரோக்களையும் உடைத்து அதில் இருந்த 54 பவுன் நகைகள் மற்றும் ரூ.35 ஆயிரத்தை கொள்ளையடித்து விட்டு சென்று விட்டனர்.

நேற்று மாலை பள்ளி முடிந்த பின்னர் வீட்டுக்கு வந்த கணேசனும், அவருடைய மனைவியும் வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அப்போது வீட்டில் இருந்த பீரோக்கள் உடைக்கப்பட்டு நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து கோட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் துணை போலீஸ் சூப்பிரண்டு இனிகோதிவ்யன், இன்ஸ்பெக்டர் அகிலாண்டேஸ்வரி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு கொள்ளை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் அங்கு வந்து வீட்டில் பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தனர். போலீஸ் மோப்ப நாயும் அங்கு வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடந்த வீட்டில் இருந்து அருகே உள்ள பாலம் வரை ஓடி சென்று நின்று விட்டது.

இது குறித்து கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஆசிரியர் வீட்டின் கதவை உடைத்து 54 பவுன் நகைகள்-ரூ.35 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் கோட்டூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்