அரசு பள்ளியில் மதிய உணவை சாப்பிட்டு கவர்னர் ஆய்வு: பஸ் நிலையத்தில் குப்பைகளையும் அகற்றினார்

பெரம்பலூருக்கு வருகை தந்த கவர்னர் செங்குணம் அரசு உயர்நிலைப்பள்ளியில் மதிய உணவினை சாப்பிட்டு ஆய்வு செய்தார். மேலும் பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் குப்பைகளை அகற்றினார்.

Update: 2018-09-20 01:41 GMT
பெரம்பலூர், 

பெரம்பலூர் மாவட்டத்தில் மத்திய-மாநில அரசுகள் மூலம் மேற்கொள்ளப்படும் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும், அத்திட்டங்களின் மூலம் பயன்பெறும் பயனாளிகளின் விவரங்கள் குறித்தும் அனைத்து துறை அலுவலர்களுடன் சுற்றுலா மாளிகையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்காக அரசின் மூலம் செயல்படுத்தும் திட்டங்களினால் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பணியாற்ற வேண்டும் என்று அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்.

இதையடுத்து செங்குணம் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளிக்கு சென்ற கவர்னர் அங்கு மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படுவதற்கு தயாராக இருந்த மதிய உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தார். பின்னர் அந்த உணவை சாப்பிட்டு பார்த்தார். இதையடுத்து கவர்னர் பள்ளி வளாகத்தில் மரக்கன்று நட்டு வைத்து தண்ணீர் ஊற்றினார். மேலும் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளிடையே தூய்மையின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த கைகழுவும் இடங்கள் சிறப்பான முறையில் பராமரிக்கப்படுகிறதா? என்றும் ஆய்வு மேற்கொண்டார்.

அதனை தொடர்ந்து கவர்னர் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தில் பயிலும் குழந்தைகளுக்கு ரோஜாப்பூ கொடுத்தார். அங்கன்வாடி மையத்தில் பயிலும் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் உணவு வகைகள் குறித்தும், அவர்களுக்கு அளிக்கப்படும் முன்பருவ கல்வி முறைகள் குறித்தும் தொடர்புடைய அலுவலர்களிடம் கேட்டறிந்தார். மேலும் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கு பாலூட்டும் தாய்மார்களுக்கு இணை ஊட்டச்சத்து உணவு பைகளை வழங்கி, அவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

அதனைத்தொடர்ந்து கவர்னர் பன்வாரிலால் புரோகித் பெரம்பலூர் சுற்றுலா மாளிகைக்கு சென்று மதிய உணவை சாப்பிட்டு விட்டு, மக்கள் பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்று, அதற்கான தீர்வுகளை உடனடியாக மேற்கொள்ள அரசு அலுவலர்களுக்கு கவர்னர் உத்தரவிட்டார்.

பின்னர் கவர்னர் பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்துக்கு சென்று, அங்கு சேர்ந்திருந்த குப்பைகளை அகற்றி, தூய்மையின் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதையடுத்து கவர்னர் நகராட்சி திடலில் மத்திய-மாநில அரசுகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்த புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார்.

மேலும் தூய்மை பாரத இயக்கத்தின் சார்பில் தூய்மை உறுதிமொழியை கவர்னர் பன்வாரிலால் புரோகித் வாசிக்க, அதனை பின்தொடர்ந்து படித்து அனைத்து அரசுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் உறுதிமொழியினை ஏற்றனர்.

பின்னர் தூய்மை பாரத இயக்கத்தின் சார்பில், சுகாதார விழிப்புணர்வு குறுந்தகட்டை கவர்னர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டு, விழிப்புணர்வு பிரசார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் தூய்மை பாரத இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற பல்வேறு விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கவர்னர் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

அப்போது கவர்னர் மாளிகையின் கூடுதல் தலைமை செயலாளர் ராஜகோபால், பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா, பெரம்பலூர் தொகுதி எம்.எல்.ஏ. தமிழ்ச்செல்வன், மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி, திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) ஸ்ரீதர், மகளிர் திட்ட இயக்குனர் தேவநாதன், வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன், பெரம்பலூர் நகராட்சி ஆணையர் வினோத் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்