சில்லறை வணிகத்தில் அன்னிய நிறுவனங்களுக்கு அனுமதி மத்திய அரசை கண்டித்து தொடர் போராட்டம் விக்கிரமராஜா அறிவிப்பு

சில்லறை வணிகத்தில் அன்னிய நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குகின்ற மத்திய அரசை கண்டித்து தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று விக்கிரமராஜா கூறினார்.

Update: 2018-09-20 21:30 GMT
நெல்லை, 

சில்லறை வணிகத்தில் அன்னிய நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குகின்ற மத்திய அரசை கண்டித்து தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா கூறினார்.

பொதுக்குழு கூட்டம் 

நெல்லை டவுன் வியாபாரிகள் நல சங்கத்தின் வெள்ளி விழா பொதுக்குழு கூட்டம் நெல்லை டவுனில் நேற்று நடந்தது. தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். செயலாளர் வெங்கட்ராமன், துணை தலைவர் பெத்துக்கனி, பொருளாளர் மீரான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை தலைவர் ஸ்டீபன் பிரேம்குமார் வரவேற்று பேசினார்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 தேர்வில் சாதனை படைத்த மாணவ–மாணவிகளுக்கு கல்வி ஊக்க தொகை வழங்கி பேசினார்.

கூட்டத்தில், நெல்லை மாநகராட்சி பகுதிகளில் கட்டிடங்களுக்கு உயர்த்திய வரியை உடனே ரத்து செய்ய வேண்டும். நெல்லையப்பர் கோவிலை சுற்றி உள்ள கோவிலுக்கு சொந்தமான வணிக நிறுவனங்களை 31–12–2018–க்குள் காலி செய்ய வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. கடை உரிமையாளர்களுக்கு மாற்று இடம் வழங்கிய பின்பு அவர்களை காலி செய்ய உத்தரவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாநில பொருளாளர் சதக்கத்துல்லா, மண்டல தலைவர்கள் சுப்பிரமணியன், ராதாகிருஷ்ணன், மாநகர தலைவர் குணசேகரன், பொருளாளர் பன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் விக்கிரமராஜா நிருபர்களிடம் கூறியதாவது:–

பெட்ரோல் டீசல் விலை 

தமிழக அரசு கட்டிடங்களுக்கு அதிகமான வரியை விதித்து வருகிறது. இதை திரும்ப பெற வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொதுமக்கள், வணிகர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். எனவே பெட்ரோல், டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்வதை ரத்து செய்துவிட்டு சரக்கு சேவை வரியின் கீழ் கொண்டு வர மத்திய–மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சில்லறை வணிகத்தில் அன்னிய நிறுவனங்களை அனுமதிக்கமாட்டோம் என்று மத்திய அரசு கூறியது. ஆனால் வால்மார்ட் நிறுவனத்தை வெவ்வேறு பெயர்களில் சில்லறை வணிகத்தில் ஈடுபட அனுமதித்து உள்ளது.

தொடர் போராட்டம் 

இதற்கு மாநில அரசு துணைபோகக்கூடாது. இப்படி சில்லறை வணிகத்தில் அன்னிய நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குகின்ற மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து வருகிற 28–ந் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும். அதன் பிறகும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தீபாவளி பண்டிகைக்கு பிறகு மத்திய அரசை கண்டித்து தொடர் போராட்டம் நடத்தப்படும்.

சென்னை–சேலம் இடையே 8 வழிச்சாலை அமைக்கும் திட்டத்தை 6 வழிச்சாலையாக மாற்றுவதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. இருந்தாலும் அந்த பகுதி விவசாயிகள், பொதுமக்கள் நலன்கருதி அந்த திட்டத்தை கைவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்