மணல் அள்ள அனுமதி வழங்கக்கோரி மாட்டு வண்டி தொழிலாளர்கள் சாலை மறியல்

மணல் அள்ள அனுமதி வழங்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட மாட்டு வண்டி தொழிலாளர்கள் 96 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-09-20 21:30 GMT
விழுப்புரம், 

விழுப்புரம் அருகே சாலாமேடு, வேட்டப்பூர், பானாம்பட்டு, மேலமேடு, காவணிப்பாக்கம், திருப்பாச்சனூர், பில்லூர், தளவானூர், தென்குச்சிப்பாளையம், ராகவன்பேட்டை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாட்டு வண்டி தொழிலாளர்கள் உள்ளனர்.

இவர்கள் விழுப்புரம் பகுதியில் உள்ள தென்பெண்ணையாற்றில் இருந்து மாட்டு வண்டிகள் மூலம் மணல் அள்ளும் தொழில் செய்து வருகின்றனர். ஆனால் சில மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்து மணல் அள்ளி வருபவர்களை கைது செய்து வருகின்றனர். எனவே மாட்டு வண்டிகளில் மணல் அள்ள மாவட்ட நிர்வாகம் முறையாக அனுமதி வழங்கக்கோரியும், மாட்டு வண்டிகளில் மணல் அள்ளுவதற்கென்று தனியாக குவாரி அமைக்க கோரியும் பலமுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாட்டு வண்டி தொழிலாளர்கள் கோரிக்கை மனு கொடுத்தனர். இருப்பினும் அனுமதி வழங்கப்படவில்லை என தெரிகிறது.

இந்நிலையில் ஆத்திரமடைந்த மாட்டு வண்டி தொழிலாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் நேற்று காலை 10.30 மணியளவில் விழுப்புரம் பானாம்பட்டு கூட்டுசாலை பஸ் நிறுத்தம் அருகில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் விழுப்புரம்- புதுச்சேரி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபின்சன், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அப்பாண்டைராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்த், ராஜாராமன், வசந்த் மற்றும் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட மாட்டு வண்டி தொழிலாளர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் அவர்கள் மறியலை கைவிடாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஏராளமான வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.

இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 96 பேரை போலீசார் கைது செய்து வாகனங்களில் ஏற்றிச்சென்று அருகில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் கைதான அனைவரும் சிறிது நேரம் கழித்து விடுவிக்கப்பட்டனர். 

மேலும் செய்திகள்