நீர்வரத்து வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டர் உத்தரவு

ராயப்பன்பட்டி சண்முகாநதி அணையை கலெக்டர் பல்லவிபல்தேவ் பார்வையிட்டார். அப்போது அணையின் நீர்வரத்து வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Update: 2018-09-20 21:30 GMT
உத்தமபாளையம்,


உத்தமபாளையம் அடுத்துள்ள ராயப்பன்பட்டியில் ஹைவேவிஸ் மலை அடிவார பகுதியில் சண்முகாநதி அணை உள்ளது. இந்த அணையின் மூலம் ராயப்பன்பட்டி, ஆனைமலையன்பட்டி, சின்னஓவுலாபுரம், அப்பிபட்டி, கன்னிசேர்வைபட்டி, சீப்பாலக்கோட்டை, வெள்ளையம்மாள்புரம், ஓடைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட குளங்கள் மற்றும் கண்மாய்களில் தண்ணீர் நிரப்பப்படும். இதன் மூலம் சுமார் ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

ஹைவேவிஸ் மலைப்பகுதி மற்றும் வனப்பகுதிகளில் பெய்யும் மழை அணைக்கு நீர்வரத்தாக உள்ளது. இந்தநிலையில் கடந்த 2 வருடமாக அதிக அளவில் மழை பெய்தும் அணை நிரம்பவில்லை. அணையின் நீர்வரத்து வாய்க்கால்களை தனியார் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் மழை பெய்தும் அணை நிரம்பவில்லை என்று விவசாயிகள் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து விவசாயிகள் மாவட்ட கலெக்டரிடம் புகார் செய்தனர்.

இதையடுத்து கலெக்டர் பல்லவிபல்தேவ் சண்முகாநதி அணையை பார்வையிட்டார். அப்போது அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் நீர்வரத்து வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனே அகற்றவேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் அணை பகுதிக்கு சுற்றுலாபயணிகள் வந்து செல்கின்றார்களா? என்று கேட்டறிந்தார். அப்போது பூங்கா மற்றும் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் இருந்தால் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வரக்கூடும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலெக்டரிடம் தெரிவித்தனர். இதில் உத்தமபாளையம் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் அன்பு செல்வம், மஞ்சளாறு கோட்ட உதவி செயற்பொறியாளர் தமிழ் செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்