சேலத்தில், சீராக குடிநீர் வழங்க கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

சேலத்தில் சீராக குடிநீர் வழங்க கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

Update: 2018-09-20 23:51 GMT
சேலம்,

சேலம் மாநகராட்சி 42-வது வார்டுக்கு உட்பட்ட கிச்சிப்பாளையம் நாராயண நகரில் குடிசை மாற்றுவாரிய அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்புக்கு கடந்த சில மாதங்களாக சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குடிநீருக்காக பக்கத்தில் உள்ள தெருக்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்துள்ளனர். அதன்பின்பும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று காலை சீராக குடிநீர் வழங்க கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் நாராயணநகர்-அம்மாபேட்டை சாலைக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த கிச்சிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பொதுமக்கள் கூறுகையில், இதற்கு முன்பு 3 நாளைக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்போது 10 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

இந்த குடிநீர் சில நேரங்கில் இரவு நேரத்தில் வருகிறது. அதிலும் மிக குறைந்த அளவிலேயே குடிநீர் வருவதால், ஒரு வீட்டிற்கு 2 அல்லது 3 குடங்கள் மட்டுமே பிடிக்க முடிகிறது. இதனால் இங்கு வசிப்பவர்களுக்கு இடையே சண்டை ஏற்படுகிறது.

இதனால் நாங்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகிறோம். எனவே சீரான முறையில் குடிநீர் வழங்க இனிமேலாவது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதைக்கேட்ட போலீசார் சீராக குடிநீர் வழங்க மாநகராட்சி அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் சாலைமறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்