பரமக்குடியில் சாலையோரம் கிடந்த சாமி சிலைகளால் பரபரப்பு

பரமக்குடியில் சாலையோரம் கிடந்த 8 சாமி சிலைகளால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த சிலைகளை கடத்தி வந்த மர்ம மனிதர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.

Update: 2018-09-21 23:00 GMT

பரமக்குடி,

 ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி காக்காதோப்பு பகுதியில் சாலையோரம் நேற்று சாமிசிலைகள் சில கிடந்தன.

இந்த தகவல் பரவியதும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து சிலைகளை பார்வையிட்டனர். அவை அனைத்தும் கற்சிலைகள் ஆகும்.

விஷ்ணு, துர்க்கை, சரசுவதி மற்றும் அம்மன் சிலைகள் உள்பட மொத்தம் 8 சிலைகள் இருந்தன. இவற்றில் 3 சிலைகள் சேதம் அடைந்து காணப்பட்டன.

இந்த சிலைகளை மர்ம நபர்கள் வேறு கோவில்களில் இருந்து கடத்தி வந்து சாலையோரம் போட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. சாமி சிலைகளை போட்டுச் சென்ற மர்ம மனிதர்கள் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி தேடிவருகிறார்கள்.

அதைத்தொடர்ந்து 8 சாமி சிலைகளும் பரமக்குடி தாசில்தார் பரமசிவனிடம் ஒப்படைக்கப்பட்டு, தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.

இது குறித்து மாவட்ட கலெக்டர் வீரராகவராவுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்றும், பின்னர் தொல்பொருள் அருங்காட்சியகத்தில் சிலைகள் ஒப்படைக்கப்படும் எனவும் தாசில்தார் பரமசிவன் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்