வனஎல்லைப்பகுதிகளை அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும் - பயிற்சி முகாமில் அதிகாரிகளுக்கு அறிவுரை

வனஎல்லைப்பகுதிகளை அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும் என்று பயிற்சி முகாமில் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

Update: 2018-09-21 22:30 GMT
வால்பாறை,

வால்பாறை அருகே அட்டகட்டியில் அமைந்துள்ள ஆனைமலைபுலிகள் காப்பக வனத்துறையின் நவீன வனமேலாண்மை பயிற்சி மையம் உள்ளது. இங்கு ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பொள்ளாச்சி மற்றும் திருப்பூர் வனக்கோட்ட வனத்துறையினருக்கு வனப்பகுதி எல்லைகள் ஆய்வு மற்றும் அளவீடு செய்வது குறித்த பயிற்சி நடைபெற்றது. இதில் ஆனைமலை புலிகள்காப்பக கள இயக்குனர் கணேசன் கலந்துகொண்டு பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்து விளக்கினார். இதில் ஓய்வு பெற்ற மாவட்ட வன அலுவலர்கள் சுகிர்தராஜ், ஆம்புரோஸ், ஓய்வு பெற்ற வனச்சரகர் தங்கராஜ், பன்னீர்செல்வம், வனத்துறை பொறியாளர் சரவணன் மற்றும் பாம்புகள் ஆராய்ச்சியாளர் மகேஷ் ஆகியோர் வனத்துறையினருக்கு பயிற்சி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

ஒவ்வொரு வனச்சரகத்தின் எல்லை பகுதிகளையும் வனச்சரகங்களுக்குள் இருக்கும் வன பீட் பகுதிகளின் எல்லைகளையும் வனத்துறையினர் அடிக்கடி சென்று ஆய்வு செய்யவேண்டும். எல்லை பகுதிகளின் அளவுகளில் மாற்றங்கள் உள்ளதா? வனஎல்லை பகுதிகளுக்கு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதா? உரிய எல்லைக்கற்கள் பதிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறதா என்பதை வனத்துறையினர் உதவியுடன் ஆய்வு செய்ய வேண்டும். அருகில் வேறு மாநிலத்தின் வன எல்லைகள் இருந்தால் அந்தந்த எல்லை பகுதிகளில் உரிய ரோந்துப்பணிகள் மேற்கொள்ள வேண்டும். அன்னியர்களின் ஊடுருவல் ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும். எல்லை பகுதிகளை சுத்தம் செய்து தனித்தன்மையுடன் வைத்திருக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் வனப்பகுதிகளில் வாழ்ந்துவரும் பாம்புகளை பாதுகாப்பது, அவைகளின் முக்கித்துவம், ஊருக்குள் பாம்புகள் நுழைந்துவிட்டால் அவைகளை எப்படி பிடிப்பது, பிடிக்கப்பட்ட பாம்புகளை எந்த இடங்களில் கொண்டுபோய் விடுவது மற்றும் பாம்புகளை கையாளும் விதங்கள் குறித்தும் பயிற்சியளிக்கப்பட்டது. ஆழியார் பகுதியில் கள பயிற்சியும் அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி வகுப்பில் பொள்ளாச்சி, உலாந்தி, வால்பாறை, மானாம்பள்ளி, உடுமலை, அமராவதி ஆகிய வனச்சரக பகுதிகளைச் சேர்ந்த வனச்சரகர்கள் காசிலிங்கம், சக்திகணேஷ், நடராஜன், முருகேசன், தனபால் ஆகியோரும், பொள்ளாச்சி, திருப்பூர் வனக்கோட்ட வனச்சரகங்களைச் சேர்ந்த வனவர்கள், வனபாதுகாவலர்கள் கலந்துகொண்டனர். பயிற்சி வகுப்பிற்கான ஏற்பாடுகளை உலாந்தி வனச்சரகர் நவீன்குமார், வனவர் நித்யா ஆகியோர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்