லாரி வாடகை கட்டணம் 22 சதவீதம் வரை உயர்வு - புக்கிங் ஏஜெண்டு சம்மேளன மாநில தலைவர்

வருகிற 24-ந் தேதி முதல் லாரி வாடகை கட்டணம் 22 சதவீதம் வரை உயர்த்தப்பட உள்ளதாக புக்கிங் ஏஜெண்டு சம்மேளன மாநில தலைவர் ராஜவடிவேல் தெரிவித்தார்.

Update: 2018-09-21 23:00 GMT
சேலம்,

தமிழ்நாடு லாரி புக்கிங் ஏஜெண்டு சம்மேளன மாநில தலைவர் ராஜவடிவேல் நேற்று சேலத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். குறிப்பாக டீசல் விலை உயர்வால் லாரி உரிமையாளர்கள் மிகவும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில், சம்மேளனத்தின் மகாசபை கூட்டம் கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலத்தில் நடந்தது.

இதில் கலந்து கொண்ட லாரி உரிமையாளர்கள் டீசல் விலை உயர்வால் வாடகை கட்டணத்தை உயர்த்துமாறு கோரிக்கை விடுத்தனர். இதனால் லாரி வாடகை கட்டணம் உயர்த்துவது என்று முடிவு செய்யப்பட்டு கூட்டத்தில் அது தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

அதன்படி வருகிற 24-ந் தேதி முதல் லாரியின் பழைய வாடகை கட்டணத்தில் இருந்து 22 சதவீதம் வரை வாடகை கட்டணம் உயர்த்தப்படுகிறது. இந்த வாடகை கட்டண உயர்வுக்கு டிரான்போர்ட்ஸ் உரிமையாளர்கள், வியாபாரிகள், ஆலை அதிபர்கள் என அனைவரும் ஆதரவு கொடுக்க வேண்டும்.

மேலும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய, மாநில அரசுகள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்