கந்தர்வகோட்டை அருகே தி.மு.க. நிர்வாகியை காரில் கடத்திய கும்பல்

கந்தர்வகோட்டை அருகே தி.மு.க. நிர்வாகியை காரில் கடத்திய கும்பலை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

Update: 2018-09-21 23:12 GMT
கந்தர்வகோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே உள்ள சங்கம் விடுதியை சேர்ந்தவர் கலையரசன் (வயது 32). இவர் கந்தர்வகோட்டை தெற்கு ஒன்றிய தி.மு.க. இளைஞரணி அமைப்பாளராக உள்ளார். மேலும் தனக்கு சொந்தமான வேனில் கல்லாக்கோட்டையில் உள்ள மதுபான தொழிற்சாலைக்கு ஊழியர்களை அழைத்துச்செல்லும் பணியிலும் ஈடுபட்டு வருகிறார். இந்தநிலையில் நேற்று காலை வழக்கம்போல் வேனில் ஊழியர்களை ஏற்றிக்கொண்டு, கல்லாக்கோட்டைக்கு சென்றார். அங்கு அவர்களை இறக்கி விட்டு, தொழிற்சாலையின் அலுவலக அறையில் கையெழுத்திட சென்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் திடீரென கலையரசனை குண்டுகட்டாக தூக்கி காரில் போட்டு கடத்தி சென்றனர். மின்னல் வேகத்தில் கல்லாக்கோட்டை நோக்கி வந்த கார் வேம்பன்பட்டி, புதுப்பட்டி வழியாக பெரியக்கோட்டையை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது காரில் இருந்த கலையரசன் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என சத்தம் போட்டார். இதைக்கேட்டு சாலையில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து அந்த காரை மடக்கி பிடித்து, கலையரசனை மீட்டனர். பின்னர் காரில் இருந்த 9 பேரையும் பொதுமக்கள் அடித்து உதைத்தனர்.

பின்னர் கந்தர்வகோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த 9 பேரையும் அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் கறம்பக்குடி அருகே உள்ள நரங்கியன்பட்டு கிராமத்தை சேர்ந்த அய்யப்பன்(27), கார்த்திக்(18), காமராஜ்(28), குணசேகரன் (29), மற்றொரு காமராஜ்(37), குழந்திரான்பட்டு கிராமத்தை சேர்ந்த குமரேசன்(29), கல்லாக்கோட்டை கள்ளர் தெருவை சேர்ந்த ராஜேஷ்(27), ஒரத்தநாடு தாலுகா திப்பன்விடுதி மணிமுத்து (23), கார் டிரைவர் கறம்பக்குடி அருகே உள்ள குளக்காரன் தெருவை சேர்ந்த மற்றொரு மணிமுத்து (23) என்பது தெரியவந்தது.

ஒரு பெண்ணின் திருமணம் தொடர்பாக நரங்கியன்பட்டு கிராமத்தை சேர்ந்தவர்களுக்கும், கலையரசனுக்கும் முன்விரோதம் இருந்ததும், அந்த பிரச்சினையில் கலையரசனை அவர்கள் கடத்தி சென்றதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து 9 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்கள் காருக்குள் பதுக்கி வைத்திருந்த அரிவாள், கத்தி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். தி.மு.க. நிர்வாகி காரில் கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்