கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 5 பேர் கைது

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-09-21 23:54 GMT
மூலக்குளம்,

புதுவை மாநிலத்தில் கஞ்சா விற்பனை செய்வதை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் குரும்பாபேட்டில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் வேளாண் அறிவியல் நிலையம் அருகே உள்ள ஒரு தோப்பில் கஞ்சா விற்பனை செய்யும் கும்பல் பதுங்கி இருப்பதாக அதிரடிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் மேட்டுப்பாளையம் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓட முயன்றது. அவர்களை போலீசார் சுற்றி வளைத்துப் பிடித்தனர். அவர்களிடம் இருந்த பையை சோதனை செய்த போது இதில் 650 கிராம் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது.

அவர்களிடம் விசாரித்ததில் தட்டாஞ்சாவடி சுப்பையாநகரை சேர்ந்த காதர் பாட்ஷாவின் மகன் முகமது ரபிக்(வயது 19) ஜீவானந்தபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த புருஷோத்தமனின் மகன் தமிழ்செல்வன்(19), சண்முகாபுரத்தை சேர்ந்த நாகராஜனின் மகன் அய்யனார்(18) முத்திரையர்பாளையம் காந்தி நகரை சேர்ந்த மணியின் மகன் சந்தோஷ்(21) மற்றும் ஒரு 17 வயதே ஆன சிறுவன் என்பதும் தெரியவந்தது.

அவர்கள் 5 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தியதில் ஆந்திராவில் இருந்து கஞ்சா வாங்கி வந்து புதுவையில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. மேல் விசாரணை நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்