பழனி முருகன் கோவிலில் நீதிபதிகள் ஆய்வு

பழனி முருகன் கோவிலில் நேற்று நீதிபதிகள் ஆய்வு செய்தனர். அப்போது பக்தர்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்.

Update: 2018-09-22 22:45 GMT
பழனி,

இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களில் பக்தர்களுக்காக செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள், கோவில் கட்டமைப்பு, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து அந்தந்த மாவட்ட நீதிபதிகள் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிபதி முரளிசங்கர், தலைமை குற்றவியல் நீதிபதி நம்பி மற்றும் நீதிபதிகள் கடந்த 20-ந்தேதி பழனிக்கு வந்து திருஆவினன்குடி கோவில், பஞ்சாமிர்த தயாரிப்பு நிலையம் ஆகியவற்றில் ஆய்வு செய்தனர்.இந்த நிலையில் பழனி முருகன் கோவிலில் நேற்று ஆய்வு நடத்தப்பட்டது. மாவட்ட முதன்மை நீதிபதி முரளிசங்கர், கூடுதல் மாவட்ட நீதிபதி மதுரசேகரன், தலைமை குற்றவியல் நீதிபதி நம்பி மற்றும் நீதிபதிகள் ரோப்கார் நிலையம், மின் இழுவை ரெயில் நிலையம், மலைக்கோவில் அலுவலகம் மற்றும் பிரசாத விற்பனை நிலையங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது ரோப்கார், மின் இழுவை ரெயில் ஆகியவற்றில் பக்தர்களுக்கான கட்டணம் எவ்வளவு, போதுமான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதா? என்று பக்தர்களிடம் கேட்டறிந்தனர். அதன் பின்னர் மலைக்கோவிலில் வைக்கப்பட்டுள்ள தங்க தொட்டிலை பார்வையிட்ட நீதிபதிகள், தொட்டிலில் எத்தனை பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளனர். அதற்கான கட்டண விவரங்கள் உள்ளிட்டவற்றை கோவில் அதிகாரிகளிடம் கேட்டனர். பின்னர் அன்னதான கூடத்துக்கு சென்ற நீதிபதிகள், பக்தர்களிடம் அன்னதானம் குறித்து புகார்கள் ஏதேனும் உள்ளதா? என கேட்டறிந்தனர்.

அதையடுத்து அன்னதான சமையல் கூடத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை நீதிபதிகள் பார்வையிட்டனர். பின்னர் மலைக்கோவில் பிரகாரத்தில் குடிநீர், கழிப்பறை வசதிகள் முறையாக செய்யப்பட்டுள்ளதா? என்றும் நீதிபதிகள் ஆய்வு செய்தனர். அதன்பிறகு மூலவர் சன்னதிக்கு சென்று முருகப்பெருமானை நீதிபதிகள் தரிசனம் செய்துவிட்டு கோவில் தலைமை அலுவலகத்துக்கு சென்று அங்கு பராமரிக்கப்படும் ஆவணங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது பழனி கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்