ஸ்ரீரங்கத்தில் லாரி மோதியதில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மண்டபத்தின் மேற்கூரை இடிந்தது

ஸ்ரீரங்கத்தில் லாரி மோதியதில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மண்டபத்தின் மேற்கூரை இடிந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2018-09-22 23:00 GMT
ஸ்ரீரங்கம்,

திருச்சி ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையம் அருகே ஸ்ரீசைதன்ய மகாபிரபுவின் பாத முத்திரைகள் வைக்கப்பட்டுள்ள நாலுகால் மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தை கடந்து தான் ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்துக்கு செல்ல வேண்டும். 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த மண்டபம் தனியாரால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் முக்கொம்பு கொள்ளிடம் அணையில் மதகுகள் உடைந்த இடத்தில் தற்காலிக சீரமைப்பு பணிகளுக்காக டாரஸ் லாரிகளில் பாறாங்கற்கள் ஸ்ரீரங்கம் வழியாக முக்கொம்புக்கு கொண்டு செல்லப்படுகிறது. நேற்று இரவு டாரஸ் லாரி ஒன்று ஸ்ரீரங்கம் வழியாக சென்றபோது, பழமை வாய்ந்த இந்த மண்டபத்தில் மோதியது. இதில் மண்டபத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது.

அதிர்ஷ்டவசமாக அங்கு யாரும் இல்லாதால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும் பழமையான மண்டபம் என்பதால் மண்டபத்தின் உள்பகுதியில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு, மண்டபத்தின் 2 தூண்கள் வெளிப்புறம் சாய்ந்த நிலையில் உள்ளது. எந்நேரமும் மண்டபம் இடிந்து விழக்கூடிய அபாயநிலையில் இருப்பதால் ஸ்ரீரங்கம் போலீசார் மண்டபத்தை சுற்றி இரும்பு தடுப்பு வேலிகளை அமைத்து பொதுமக்கள் யாரும் அங்கு சென்றுவிடாதபடி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து வடக்கு போக்குவரத்து புலனாய்வுபிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்