துப்பாக்கி தொழிற்சாலை டாக்டர்-ஊழியர் வீடுகளில் 29 பவுன் நகை, பணம் திருட்டு

துப்பாக்கி தொழிற்சாலை டாக்டர் மற்றும் ஊழியர் வீடுகளில் 29 பவுன் நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2018-09-23 22:15 GMT
திருவெறும்பூர்,

திருவெறும்பூரை அடுத்துள்ள துப்பாக்கி தொழிற்சாலையின் ஒரு பிரிவான எச்.ஏ.பி.பி. குடியிருப்பை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் எச்.ஏ.பி.பி.யில் டாக்டராக பணியாற்றி வருகிறார். இதே பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவரும் எச்.ஏ.பி.பி. ஊழியர் ஆவார்.

தங்களுடைய குடும்பத்தினருடன் உறவினர்களை பார்ப்பதற்காக ரமேஷ் ஆந்திராவிற்கும், டாக்டர் ராமச்சந்திரன் மதுரைக்கும் சென்று இருந்தனர்.

2 வீடுகளிலும் ஆள் நடமாட்டம் இல்லாததை தெரிந்து கொண்ட மர்ம நபர்கள் 2 பேர் வீடுகளிலும் தங்கள் கைவரிசையை காட்டி உள்ளனர். நேற்று முன்தினம் அவர்களுடைய வீட்டு கதவுகளில் உள்ள பூட்டுகள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அப்பகுதி மக்கள் நவல்பட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், சம்பவ இடத்துக்கு சென்று போலீசார் விசாரணை நடத்தினர். இதுகுறித்து இருவருக்கும் போலீசார் தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில், நேற்று காலை டாக்டர் ராமச்சந்திரன் மதுரையில் இருந்தும், ரமேஷ் ஆந்திராவில் இருந்தும் வீட்டிற்கு வந்தனர். அப்போது ரமேஷ் வீட்டில் 26 பவுன் நகைகளும், ரூ.50 ஆயிரம் ரொக்கமும் திருட்டு போனது தெரிய வந்தது. டாக்டர் ராமச்சந்திரன் வீட்டில் 3 பவுன் நகை திருட்டு போயிருந்தது தெரியவந்தது.

இது குறித்து நவல்பட்டு போலீசில் கொடுக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். ஏற்கனவே இதே குடியிருப்பு பகுதியில் கடந்த 4 மாதத்துக்கு முன்பு ஒரேநாள் இரவில் 6 வீடுகளில் திருட்டு சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்