காஞ்சீபுரம்,திருவள்ளூர் மாவட்டங்களில் மணல் கடத்திய 8 பேர் கைது

திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் மணல் கடத்திய 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-09-23 23:54 GMT
பாலுச்செட்டிச்சத்திரம்

காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுப்பிரமணியன் மேற்பார்வையில் பாலுச்செட்டிசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகர் தலைமையில் போலீசார், காஞ்சீபுரம் மாவட்டம் தாமல் பைபாஸ் சாலை, திம்மசமுத்திரம், சிறுகாவேரிப்பாக்கம் போன்ற இடங்களில் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக, வேலூர் மாவட்டத்தில் இருந்து மணல் கடத்தி வந்த 3 லாரிகளை போலீசார் மடக்கி பிடித்தனர்.

இதையடுத்து லாரி டிரைவரான காஞ்சீபுரம் ஒலிமுகமதுபேட்டை காவங்கரையை சேர்ந்த வெங்கடேசன் (23), வாலாஜா தாலுகாவை சேர்ந்த தினேஷ் (20) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தப்பி ஓடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவள்ளூர் தாலுகா போலீசார் நேற்று முன்தினம் திருவள்ளூர் மாவட்டம் திருப்பாச்சூர் பகுதியில் உள்ள ஏரியின் அருகே ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மணல் கடத்தி வந்த ஒரு டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார் அதை ஓட்டி வந்த திருப்பாச்சூர் கோட்டை காலனியை சேர்ந்த கோபி (வயது 22), உடன் வந்த நாகராஜ் (35)ஆகியோரை கைது செய்தனர். அதேபோல மப்பேடு போலீசார் நேற்று முன்தினம் பேரம்பாக்கம் பகுதியில் உள்ள கூவம் ஆற்றின் அருகே ரோந்துப்பணியில் ஈடுப்பட்டனர்.
அப்போது அந்த வழியாக மணல் கடத்தி வந்த ஒரு மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்த போலீசார் அதை ஓட்டி வந்த பேரம்பாக்கத்தை சேர்ந்த மணிகண்டன் (27), உடன் இருந்த அதே பகுதியை சேர்ந்த ராமன் (27), ஜெயவேல் (37), ரவீந்திரன் (37) ஆகியோரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்