தமிழக–கர்நாடக எல்லையில் வயது முதிர்வால் பெண் யானை சாவு

தமிழக–கர்நாடக எல்லையில் வயது முதிர்வால் பெண் யானை இறந்தது.

Update: 2018-09-24 21:30 GMT

தாளவாடி,

கர்நாடக மாநிலம் டீசுவு புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட சாம்ராஜ்நகர் வனக்கோட்டத்தில் எத்திகட்டா வனப்பகுதி உள்ளது. தமிழக–கர்நாடக எல்லையில் அமைந்துள்ள இந்த வனப்பகுதியில் கடந்த 2 நாட்களாக ஒரு பெண் யானை உடல் சோர்வுடன் சுற்றி திரிந்தது. அதுபற்றி தகவல் கிடைத்ததும் கர்நாடக வன ஊழியர்கள் அங்கு சென்று யானையை கண்காணித்து வந்தனர். இதேபோல் தாளவாடி வனச்சரகர் சிவக்குமார் மற்றும் வன ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு சென்று கர்நாடக வன ஊழியர்களுடன் இனைந்து யானைக்கு தண்ணீர் மற்றும் கரும்புகள் வழங்கினார்கள்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் மிகுந்த சோர்வுடன் காணப்பட்ட யானை நடக்கமுடியாமல் படுத்துக்கொண்டது. இதனால் யானைக்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்த வனத்துறையினர் கர்நாடக மாநிலத்தில் உள்ள சாம்ராஜ்நகர் கால்நடை மருத்துவர் புனீத்தை சம்பவ இடத்துக்கு வரவழைத்தார்கள். அவர் யானைக்கு சிகிச்சை அளித்தார். ஆனால் யானை எழுந்து நிற்கமுடியாமல் மேலும் சோர்வடைந்தது.

இதைத்தொடர்ந்து நேற்று காலை சத்தியமங்கலம் புலிகள் காப்பக கால்நடை மருத்துவர் அசோகன் அங்கு சென்று யானைக்கு தீவிர சிகிச்சை அளித்தார். ஆனால் சிகிச்சை பலனில்லாமல் நேற்று மதியம் யானை இறந்தது.

அதைத்தொடர்ந்து கால்நடை டாக்டர்கள் யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தார்கள். பிறகு அவர்கள் கூறும்போது, ‘இறந்த பெண் யானைக்கு 55 வயது இருக்கும். வயது முதிர்வின் காரணமாக இறந்துவிட்டது‘. என்றார்கள். பிறகு யானையின் உடல் அங்கேயே குழி தோண்டி புதைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்