தாய் கண் முன்னே தீக்குளிக்க முயன்ற வாலிபர் கைது

தேனி கலெக்டர் அலுவலகத்தில் தாய் கண் முன்னே தீக்குளிக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். மண்எண்ணெய் கேனுடன் வந்த 2 மூதாட்டிகளையும் போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

Update: 2018-09-24 21:30 GMT
தேனி,


தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் மனு கொடுப்பதற்காக சின்னமனூர் அருகே உள்ள ஊத்துப்பட்டியை சேர்ந்த பிச்சைமணி மனைவி லட்சுமி, தனது மகன் செல்வக்குமாருடன் (வயது 26) வந்தார்.

கலெக்டர் அலுவலக வளாகத்தில் நின்று கொண்டு இருந்த போது, செல்வக்குமார் ஒரு கேனில் மறைத்து எடுத்து வந்த மண்எண்ணெயை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவருடைய தாய் கண்முன்னே இந்த சம்பவம் நடந்தது. அப்போது அங்கு நின்ற போலீசார் ஓடி வந்து அவரை தடுத்து நிறுத்தினர்.

இதுகுறித்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, தனது வீட்டில் இருந்து கழிவுநீர் வெளியேற்றுவது தொடர்பாக பக்கத்து வீடுகளில் வசிக்கும் சிலர் தகராறு செய்து அவரை தாக்கியதாகவும், இதுகுறித்து சின்னமனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்காததால் தற்கொலைக்கு முயன்றதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து தற்கொலைக்கு முயற்சி செய்ததாக அவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையே காலையில் இருந்தே கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த மக்களை போலீசார் சோதனை நடத்தினர். பொதுமக்கள் கொண்டு வரும் பைகளை சோதனை நடத்தி மண்எண்ணெய், விஷம் எதுவும் எடுத்து வருகிறார்களா? என்று போலீசார் சோதனை செய்தனர். அவ்வாறு சோதனை செய்த போது மூதாட்டி ஒருவர் ஒரு லிட்டர் மண்எண்ணெய் எடுத்து வந்தார்.
விசாரணையில் அவர் சொத்து பிரச்சினை குறித்து மனு அளித்தும் தீர்வு கிடைக்காததால் மண்எண்ணெய் ஊற்றி தற்கொலை செய்ய வந்ததாக தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரிடம் இருந்து மண்எண்ணெயை பறிமுதல் செய்து, அறிவுரைகள் வழங்கி போலீசார் அனுப்பி வைத்தனர்.

இதேபோல், தம்மிநாயக்கன்பட்டியை சேர்ந்த துர்க்கையம்மாள் (75) என்பவர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த போது, அவர் கொண்டு வந்த பையை போலீசார் சோதனை செய்தனர். அதிலும் ஒரு கேனில் மண்எண்ணெய் இருந்தது. அவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர், அவருக்கு அறிவுரைகள் வழங்கி அனுப்பி வைத்தனர்.

பின்னர் அவர் கலெக்டரிடம் அளித்த மனுவில், ‘எங்கள் பகுதியில் துர்க்கையம்மன் கோவில் அருகில் அரசு புறம்போக்கு நிலத்தில் விவசாயம் செய்து பிழைப்பு நடத்தி வந்தேன். அந்த இடத்தில் பயிர்களை அழித்து விட்டு தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். போடி தாலுகா அலுவலகத்திலும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் புகார் அளித்ததால் ஆக்கிரமிப்பை அகற்றினார்கள். தற்போது மீண்டும் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார். 

மேலும் செய்திகள்