முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு திருவள்ளூரில் வரவேற்பு பொதுமக்களிடம் குறை கேட்டார்

குடும்பத்துடன் திருப்பதி சென்ற முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு திருவள்ளூரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அவர் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

Update: 2018-09-24 22:30 GMT
திருவள்ளூர்,

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நேற்று தனது குடும்பத்தினருடன் சென்னையில் இருந்து கார் மூலம் திருவள்ளூர் வழியாக திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார்.

திருவள்ளூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில், அவருக்கு மாவட்ட எல்லையில் அமைச்சர் பென்ஜமின், திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளரும், பொன்னேரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான சிறுணியம் பி.பலராமன் ஆகியோர் மலர்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

இதில் மாநில ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் செவ்வை சம்பத்குமார், திருவள்ளூர் முன்னாள் நகர்மன்ற தலைவர் கமாண்டோ அ.பாஸ்கரன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர்கள் காட்டுப்பாக்கம் திருநாவுக்கரசு, புட்லூர் சந்திரசேகர் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டு முதல்-அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

முதல்-அமைச்சர் வரும் தகவல் அறிந்து திருவள்ளூர் ஆயில்மில் பகுதியில் ஏராளமான பெண்கள் உள்பட பொதுமக்கள் கூடியிருந்தனர். இதை கண்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காரில் இருந்து இறங்கி சிறிது தூரம் நடந்து சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது பொதுமக்கள் தங்களது குறைகளை அவரிடம் எடுத்துக்கூறி மனுக்களை அளித்தனர். அந்த மனுக்களை பெற்றுக்கொண்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். பின்னர் அவர், காரில் ஏறி குடும்பத்துடன் திருப்பதிக்கு புறப்பட்டு சென்றார்.

முதல்-அமைச்சரை நேரில் காணவும், அவரிடம் கோரிக்கை மனுக்களை வழங்கவும் பொதுமக்கள் ஒருவரை ஒருவர் முண்டியடித்துக்கொண்டு வந்தனர். இந்த கூட்டநெரிசலில் சிக்கி திருவள்ளூரை அடுத்த புட்லூரைச் சேர்ந்த குமாரி (வயது 50) என்ற பெண் திடீரென மயங்கி விழுந்தார். அவரை போலீசார் மீட்டு தண்ணீர் தெளித்து மயக்கம் தெளிய வைத்தனர். பின்னர் அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

முதல்-அமைச்சர் திருப்பதி செல்வதை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட எல்லை வரை ஆங்காங்கே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்