2 என்ஜினீயர்கள் வீடுகளில் நகை-பணம் திருட்டு

மாங்காடு மற்றும் குன்றத்தூர் அருகே 2 என்ஜினீயர்களின் வீடுகளில் நகை, பணம் திருட்டு போனது.

Update: 2018-09-24 22:45 GMT
பூந்தமல்லி,

மாங்காடு அம்பாள் நகர், பாலாஜி அவென்யூ பகுதியைச்சேர்ந்தவர் ரமேஷ்(வயது 42). மெக்கானிக்கல் என்ஜினீயரான இவர், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு, தனது மனைவியுடன் சொந்தஊரான திருவண்ணா மலைக்கு சென்றுவிட்டார்.

நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் இரும்பு மற்றும் மரக்கதவுகளில் இருந்த பூட்டுகள் உடைக்கப்பட்டு, கதவு திறந்து கிடப்பதைகண்டு அதிர்ச்சி அடைந்தார்.

வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறக்கப்பட்டு, அதில் இருந்த துணிகள், பொருட்கள் அனைத்தும் அறை முழுவதும் சிதறிக்கிடந்தது.

25 பவுன் நகை திருட்டு

பீரோவை சோதனை செய்தபோது, அதில் வைத்து இருந்த 25 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் திருட்டுபோய் இருப்பது தெரிந்தது. ரமேஷ், தனது மனைவியுடன் ஊருக்கு சென்று இருப்பதை நோட்டமிட்ட மர்மநபர்கள், அவரது வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச்சென்று உள்ளனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் மாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

குன்றத்தூரை அடுத்த கோவூர் மதுரா அவென்யூ, காமராஜர் நகரைச் சேர்ந்தவர் வெங்கடேசன்(35). சாப்ட்வேர் என்ஜினீயரான இவர், மணப்பாக்கத்தில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

கடந்த வெள்ளிக்கிழமை வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன், விழுப்புரத்தில் நடைபெற்ற உறவினர் இல்ல நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்று விட்டார். நிகழ்ச்சி முடிந்து நேற்று அதிகாலை வீட்டுக்கு திரும்பி வந்த அவர், கதவை திறந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தார்.

ஜன்னல் கதவு உடைப்பு

அப்போது வீட்டில் உள்ள பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த துணிகள், பொருட்கள் அனைத்தும் சிதறிக்கிடந்தது. இது குறித்து மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த போலீசார், அந்த வீட்டை சோதனை செய்தனர். அதில் மர்மநபர்கள், வெங்கடேசன் வீட்டின் பின்புறம் உள்ள குளியல் அறை ஜன்னல் கதவை உடைத்து அதன் வழியாக வீட்டுக்குள் நுழைந்தனர். பின்னர் பீரோவை உடைத்து அதில் இருந்த 13 பவுன் நகைகள் மற்றும் பணத்தை திருடிச்சென்று இருப்பது தெரிந்தது.

இதுபற்றி மாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்