கழுத்தை அறுத்து வாலிபர் கொலை: மனைவி-கள்ளக்காதலனை பிடிக்க போலீசார் விரைந்தது

கழுத்தை அறுத்து வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில், மனைவி-கள்ளக்காதலனை பிடிக்க தனிப்படை போலீசார் பெங்களூரு விரைந்துள்ளனர்.

Update: 2018-09-25 22:00 GMT
தேவதானப்பட்டி,


தேவதானப்பட்டி அருகே கொடைக்கானல் மலைப்பாதையில், பட்டறைப்பாறை என்னுமிடத்தில் கடந்த 18-ந்தேதி 30 வயதுடைய வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவருடைய கழுத்து அறுக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது முதலில் தெரியவில்லை.

இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கொலை செய்யப்பட்டவர், கர்நாடக மாநிலம் மங்களூர் ஜே.எம்.ரோடு காஞ்சிபட்டா பாலக்காபாடியை சேர்ந்த முகமது சமீர் (வயது 30) என்பது தெரியவந்தது. அவருடைய மனைவி பிரதோஸ். இவர்களுக்கு 6 மாத ஆண் குழந்தை உள்ளது.

போலீசாரின் விசாரணையில் ‘மங்களூருவை சேர்ந்த கார் டிரைவர் முகமது யாசிக் என்பவரும், பிரதோசும் உறவினர்கள் ஆவர். இதனால் அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த முகமது சமீர், கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறை எடுத்து சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

பின்னர் அவர் மனைவி, குழந்தையுடன் பெங்களூருவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அப்போது கார் டிரைவர் முகமது யாசிக் அவர்களை அழைத்து சென்றுள்ளார். அப்போது பிரதோஸ் தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து முகமது சமீரை கழுத்தை அறுத்து கொலை செய்து உடலை காரில் ஏற்றி கொடைக் கானலில் மலைப்பகுதியில் வீசி சென்றது’ தெரியவந்தது.

இதையடுத்து அவர்களை பிடிக்க தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் மேற்பார்வையில் தேவதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுமாரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கி விட்டனர்.

அப்போது பிரதோஸ், கள்ளக்காதலனுடன் பெங்களூருவில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து தனிப்படை போலீசார் பெங்களூரு விரைந்துள்ளனர். அவர்கள் கைது செய்யப்பட்ட பின்னரே கொலைக்கான காரணம் குறித்து தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்