கோவை நரசிம்ம பெருமாள் கோவிலில் ஐம்பொன் சிலைகளை திருடியவருக்கு 5 ஆண்டு சிறை

கோவை நரசிம்ம பெருமாள் கோவிலில் ஐம்பொன் சிலைகளை திருடியவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து கும்பகோணம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

Update: 2018-09-25 23:00 GMT
கும்பகோணம்,

கோவை அருகே ஜங்கமநாயக்கன்பாளையத்தில் நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இருந்த நரசிம்ம பெருமாள், நாமகிரி தாயார், ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய 4 ஐம்பொன் சிலைகள் கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் திருடப்பட்டன. இதுதொடர்பாக துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கோவை ஒக்கிலிபாளையம் சாஸ்திரி வீதியை சேர்ந்த சண்முகம் (வயது 51), செந்தில் ஆகிய 2 பேருக்கு சிலை திருட்டில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து இவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள கூடுதல் தலைமை குற்றவியல் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த சண்முகம் தலை மறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வந்தனர். இதனிடையே வழக்கில் தொடர்புடைய செந்திலுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து கடந்த மார்ச் மாதம் 20-ந் தேதி கும்பகோணம் கோர்ட்டு உத்தரவிட்டது.இந்த நிலையில் தலைமறைவாக இருந்த சண்முகத்தை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து நேற்று கும்பகோணம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி அய்யப்பன் பிள்ளை, சண்முகத்துக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும் செய்திகள்