சாலைகளை சீரமைக்க கோரி கொத்தமங்கலத்தில் மறியலுக்கு முயன்ற பொதுமக்கள்

சாலைகளை சீரமைக்க கோரி கொத்தமங்கலத்தில் பொதுமக்கள் மறியல் செய்ய முயன்றனர்.

Update: 2018-09-26 22:45 GMT
கீரமங்கலம்,

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே உள்ள கொத்தமங்கலத்தில் இருந்து மறமடக்கி வரை சுமார் 3 கிலோ மீட்டர் சாலை சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டு, தற்போது குண்டும் குழியுமாக காணப்பட்டது. அந்த சாலையை சீரமைக்க சட்டமன்ற உறுப்பினர் பரிந்துரையின் கீழ் அந்த சாலை கடந்த மாதம் ரூ.1 கோடியே 27 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டது. ஆனால் சீரமைக்கபட்ட சாலை உயரமாக இருப்பதால் சாலையில் செல்லும் வாகனங்கள் அந்த சாலையில் இருந்து கீழே இறங்க முடியாமல் விபத்துகள் ஏற்பட்டு வந்தது. இதனால் சாலையோரங்களில் கிராவல் மண் நிரப்பி ஆபத்தான சாலையோர பள்ளங்களை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதிகாரிகள் அதை கண்டுகொள்ளவில்லை.

இதையடுத்து தொடரும் விபத்துகளை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மெய்யநாதன் எம்.எல்.ஏ. தலைமையில் கொத்தமங்கலம் கடைவீதியில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என பொதுமக்கள் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டம் அறிவிப்பு வெளியான நிலையில் கடைவீதி உள்ளிட்ட சில இடங்களில் கொத்தமங்கலத்தில் ஒரு குளத்தில் இருந்து எடுக்கப்பட்ட செம்மண் கொண்டு வரப்பட்டு சாலையோரங்களில் குவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் நேற்று காலை மெய்யநாதன் எம்.எல்.ஏ. தலைமையில் கொத்தமங்கலம் கடைவீதியில் பொதுமக்கள் சாலைமறியல் செய்ய முயன்றனர். இதையடுத்து அங்கிருந்த நெடுஞ்சாலைத் துறை உதவி பொறியாளர் சுகந்தி, கீரமங்கலம் சரக வருவாய் ஆய்வாளர் ரெங்கராஜன், கீரமங்கலம் போலீசார் சாலைமறியலுக்கு முயன்ற பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள், சாலையில் உள்ள பள்ளங்களை சீரமைக்க கிராவல் மண் பயன்படுத்தினால் போராட்டத்தை கைவிடுவதாக கூறினர். ஆனால் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கிராவல் மண்ணை நிரவ திட்ட வரைவு இல்லை என்று கூறினர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு உடன்பாடு ஏற்பட்டவில்லை.

பின்னர் நாளை (இன்று) திரளாக மக்களை திரட்டி மறியல் செய்வோம் என்று மெய்யநாதன் எம்.எல்.ஏ. கூறினார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு நெடுஞ்சாலை துறை உதவி இயக்குனர் சத்தியமூர்த்தி வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது 10 நாட்களுக்குள் சாலை ஓரங்கள் சீரமைக்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடதக்கது.

மேலும் செய்திகள்