சொத்துவரி உயர்வால் அரசுக்கு கூடுதலாக ரூ.500 கோடி வருவாய் கிடைக்கும்

சொத்துவரி உயர்வால் அரசுக்கு கூடுதலாக ரூ.500 கோடி வருவாய் கிடைக்கும் என தமிழ்நாடு நகராட்சி நிர்வாக ஆணையர் கூறினார்.

Update: 2018-09-26 22:45 GMT
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை நகராட்சி பகுதிகளில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகளை, தமிழ்நாடு நகராட்சி நிர்வாக ஆணையர் பிரகாஷ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது புதுக்கோட்டை காந்தி பூங்காவில் செயல்பட்டு வரும் குப்பைகளை இயற்கை உரமாக மாற்றும் பணி, பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் வீடுகளில் நடைபெற்று வரும் இணைப்பு பணி ஆகியவற்றையும் ஆய்வு மேற்கொண்டார்.

அதனை தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் அனைத்து நகராட்சி மற்றும் மாநகராட்சிகளிலும், மத்திய அரசின் அம்ருத் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் கிடைக்கும் வகையில் பணிகள் நடந்து வருகிறது. இதேபோன்று பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்பட்ட பகுதிகளில் அனைத்து வீடுகளுக்கும் இணைப்புகள் வழங்கப்பட உள்ளது. தற்போது மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் 55 சதவீத குடியிருப்புகளுக்கு மட்டும் தான் குடிநீர் இணைப்பு உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட உள்ளது.

இதேபோன்று சுகாதார பணியாளர்கள் வீடு, வீடாக சென்று குப்பைகளை சேகரிப்பதற்கு ரூ.200 கோடி மதிப்பில் பேட்டரி வாகனங்கள் வழங்கபட உள்ளது.

தமிழகத்தில் மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் நிலை இல்லை என்று உறுதியாக கூறுகிறேன். துப்புரவு பணியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் போதுமானதாக வழங்கப்பட்டுள்ளது. தற்போது சொத்து வரி உயர்வால் அரசுக்கு கூடுதலாக ரூ.500 கோடி வருவாய் கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்